தமிழ்நாடு

tamil nadu

அரசு பள்ளியில் கட்சி நிகழ்ச்சி..! கூட்ட நெரிசலால் மாணவர்கள் கடும் சிரமம்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 9:48 AM IST

திருச்சி அருகே அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் திமுக சார்பில் நடைபெற்ற இலவச வேஷ்டி, சேலை உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியின் ஏராளமான மக்கள் கூடியதால், பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் மிகவும் சிரமத்தை சந்தித்தனர்.

Etv Bharat
Etv Bharat

அரசு பள்ளி வளாகத்தில் திமுக நிகழ்ச்சி என புகார்

திருச்சி: நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு ஆகியவற்றில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. தேர்தல் அறிவித்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்தால், அரசின் திட்டங்கள் மற்றும் கட்சி சார்ந்த எந்த ஒரு நலத்திட்டங்கள் வழங்கக்கூடாது என்பது விதி.

இதனிடையே, திருச்சியில் திமுக சார்பில்‌ கடந்த சில நாட்களாக கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழா ஆகியவற்றை முன்னிட்டு வார்டு மற்றும் பகுதி வாரியாக பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று (பிப்.1) ஒத்தக்கடை, தில்லை நகர், மிளகுபாறை, பொன்னகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு ‌வழங்கப்பட்டது.

அதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகனும், தொழிலதிபருமான அருண் நேரு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வேஷ்டி, சட்டை, புடவை, துண்டு, காலை உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் பிரம்மாண்ட பேனர்களை திமுகவினர் வைத்திருந்தனர்.

இதையும் படிங்க:“எம்ஜிஆர் பற்றி பேச ஆ.ராசாவிற்கு எந்த தகுதியும் இல்லை” - கடுமையாக சாடிய கடம்பூர் ராஜு

குறிப்பாக, இந்த நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி கருமண்டபம் பொன்னகர் ‌பகுதியில் உள்ள மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அதற்காக பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் பந்தல் அமைத்து, ஒலிபெருக்கி மூலம் கட்சி பாடல்கள் போடப்பட்டு இருந்தது.

இதனால் பள்ளிக்கு வந்த மாணவர்கள், அரசியல்வாதிகளின் சொகுசு கார்களையும், நலத்திட்ட உதவிகள் பெற வந்திருந்த மக்கள் கூட்டத்தையும் மிரட்சியுடன் கடந்துச் சென்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் ஒலிபெருக்கி மூலம் கட்சிப் பாடல் ஒலிப்பரப்பட்டது மாணவர்கள் பாடம் பயில இடையூறு விளைவிக்கும் வகையில் இருந்தது.

மேலும், ஒரு கட்சி சார்ந்த நிகழ்ச்சியை பள்ளி வளாகத்தில், மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் நடத்தியதற்கு சமூக ஆர்வலர்கள் தரப்பில் எதிர்ப்பு கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. மேலும், இது போன்ற பள்ளி வளாகத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:“சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க அதிகாரம் இல்லை”.. தமிழக அரசு!

ABOUT THE AUTHOR

...view details