தமிழ்நாடு

tamil nadu

''இளையராஜா பற்றி குறைகள் சொன்னால்.. விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்'' - வைரமுத்து குறித்து கங்கை அமரன்! - Gangai Amaran reacted

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 10:42 PM IST

Gangai Amaran reacted to Vairamuthu speech: தன்னை தானே புகழ்ந்து பேசிக்கொண்டு இருக்கக்கூடிய கவிஞர்கள் யார் இருக்கிறார்? நான் தான், நான் மட்டும் தான் என இருக்கிறார் கவிஞர் வைரமுத்து என கங்கை அமரன் வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைரமுத்துவை விமரிசித்த கங்கை அமரன்
இளையராஜா பற்றி குற்றம் குறைகள் சொல்வதாக இருந்தால் அதற்குரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்

சென்னை:இயக்குநர் செல்வம் மாதப்பன் இயக்கத்தில், நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் 'படிக்காத பக்கங்கள்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, இசை குறித்து மேடையில் பேசியது விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

நிகழ்ச்சி மேடையில் பேசிய வைரமுத்து, “இசை பெரியதா? பாடல் வரிகள் பெரியதா? என்கிற பிரச்சனை தற்போது சினிமாவில் எழுந்துள்ளது. இசையும் பாடல் வரிகளும் இணைந்திருந்தால் நல்ல பாடல் உருவாகும். ஆனால், சில சமயங்களில் இசையை விட மொழி சிறந்ததாகத் திகழும் சந்தர்ப்பங்கள் உண்டு, இதைப் புரிந்துகொண்டவன் ஞானி,புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி”, என பேசியுள்ளார்.

இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசியிருப்பது, இசைஞானி இளையராஜாவை வைரமுத்து மறைமுகமாக விமர்சித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், வைரமுத்துவின் இந்த பேச்சைக் கங்கை அமரன் விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், "எங்களால் மேலே வந்தவர், வந்த இடத்தையே காலில் போட்டு மிதிப்பது போலப் பேட்டி கொடுப்பதா? மனிதனுக்கு நன்றி வேண்டும். அவரது பாடலுக்கு அதிகமான புகழ் வந்ததால் கர்வம் தலைக் கேரிவிட்டது, அடக்கி வைக்க ஆள் இல்லாததால் துள்ளிக் கொண்டிருக்கிறார்.

வைரமுத்துவை வாழவைத்த இளையராஜாவின் போட்டோ வைத்து தினம் வணங்க வேண்டும். அவர் இல்லை என்றால் வைரமுத்துவின் பெயரே இருந்திருக்காது. நான் அவருக்குச் சவால் விடுகிறேன், இளையராஜா இசையில் நீங்கள் எழுதிய பாடல்களை வேறு ஒரு இசையமைப்பாளரிடம் கொடுத்துப் பாருங்கள், அது முடியாது. இசையில்லாமல் பாடல்கள் இல்லை.

தன்னை தானே புகழ்ந்து பேசிக்கொண்டு இருக்கக்கூடிய கவிஞர்கள் யார் இருக்கிறார்? நான் தான், நான் மட்டும் தான் என இருக்கிறார். இளையராஜா குறித்து சின்ன குற்றமோ, குறைகளோ சொல்வதாக இருந்தால் அதற்குரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்”, என பேசியுள்ளார்.

இதையும் படிங்க: “பாட்டுக்கு பெயர் வைத்தது மொழி.. அதற்கு அழகு செய்தது இசை” - வைரமுத்து குறிப்பிடுவது யாரை? - Padikkaatha Pakkangkal

ABOUT THE AUTHOR

...view details