தமிழ்நாடு

tamil nadu

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் பெற எந்த தகுதியும் இல்லை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் முழு விவரம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 5:49 PM IST

Senthil Balaji Bail Case: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும், செல்வாக்கான நபராகவே நீடிக்கிறார் எனவும், ஆகையால் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் பெற எந்த தகுதியும் இல்லை எனவும் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Senthil Balaji Case
செந்தில் பாலாஜி

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், கடந்த 2023 ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அதாவது நீதிமன்ற உத்தரவில், வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை எம்.பி. எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் பெறப்பட்டுள்ளதாகவும், அந்த ஆவணங்கள் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், இந்த ஆதாரங்கள் திருத்தப்பட்டிருப்பதாக முடிவுக்கு வர எந்த காரணங்களும் இல்லை என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரங்கள் அனைத்தும் உண்மையானதுதான், அதன் மதிப்பை சந்தேகிக்க முடியாது என்றும், இந்த வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களிலிருந்து செந்தில் பாலாஜி குற்றம் புரியவில்லை என நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதால், சாட்சிகளைக் கலைக்க மாட்டார் என்ற வாதத்தை ஏற்க முடியாது, ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்புதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என உத்தரவில் சுட்டிக் காட்டியுள்ளார்.

சிறையில் இருந்த 8 மாதங்களில் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்ததன் மூலமும், அவருக்கு மாநில அரசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளதிலிருந்தும், அவருக்கு அதிக செல்வாக்கு இருப்பதையே காட்டுவதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், அமைச்சர் பதவியிலிருந்து விலகினாலும் கூட, ஆளும்கட்சியின் எம்.எல்.ஏவாக நீடிப்பதால், அரசியலில் அவருக்கான செல்வாக்கு தொடர்கிறது என்று முடிவிற்கு வர எந்த தயக்கமும் இல்லை.

இந்த வழக்கில் மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சாட்சிகளாக இருப்பதால் அவர்கள் அச்சுறுத்தப்படலாம் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி, ஏற்கனவே இந்த வழக்கில் புகார்தாரர்களுடன் சமரசம் செய்யப்பட்டதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து, வேலைக்கு பணம் பெற்று மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், பொதுநலனைக் கருத்தில் கொண்டு, அவருக்கு ஜாமீன் பெறத் தகுதியில்லை என இந்த நீதிமன்றம் முடிவு செய்கிறது.

தற்போது செந்தில் பாலாஜி ஜாமீன் பெற எந்த தகுதியும் இல்லை என்பதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனவும், 8 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து வருவதால், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை, அடுத்த 3 மாதங்களில் முடிக்க சென்னை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு" இந்த வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு மீண்டும் தள்ளுபடி.. நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறிய காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details