தமிழ்நாடு

tamil nadu

பெண் எஸ்பி மீதான பாலியல் வழக்கு - முன்னாள் டிஜிபிக்கு தொடரும் பின்னடைவு! நீதிமன்ற தீர்ப்பு என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 7:25 PM IST

dgp rajesh das: பெண் எஸ்பி பாலியல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னால் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (ஜன. 29) ஆஜரானார்.

former-dgp-rajesh-das-appeared-in-villupuram-court
former-dgp-rajesh-das-appeared-in-villupuram-court

விழுப்புரம்:கடந்த 2021ஆம் ஆண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த பெண் எஸ்பி.க்கு சட்டம் - ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி, டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோரிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து ,ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன், டிஜிபி ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் ராஜேஷ் தாசிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.20,500 அபராதமும் விதித்தது.

இதற்கு உடந்தையாக செயல்பட்ட செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையிடு செய்தார். ஆனாலும் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தார் ராஜேஷ் தாஸ்.

இந்த வழக்கு கடந்த 24ஆம் தேதி நீதிபதி பூர்ணிமா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வருகின்ற 29ஆம் தேதி நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இன்று (ஜன. 29) ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்போது தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கக் கால அவகாசம் வேண்டும் எனவும் வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் ஜனவரி 31ஆம் தேதி வாதங்களை முன்வைக்காவிட்டால் பிப்ரவரி 3 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என உத்தரவு பிறப்பித்தார்.

முன்னதாக இவ்வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என ராஜேஷ் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதே போல் மேல்முறையீட்டு மனுவை வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, மார்ச் மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மூளை பக்கவாதம் இளைஞர்களை அதிகளவில் தாக்குகிறது.. AIIMS ஆய்வில் பகீர் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details