தமிழ்நாடு

tamil nadu

வண்டலூர் திமுக நிர்வாகி ஆராமுதன் கொலை வழக்கு; சிறுவன் உள்பட 5 பேர் நீதிமன்றத்தில் சரண்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 5:18 PM IST

Updated : Mar 2, 2024, 7:33 AM IST

DMK North Union Secretary Aramuthan 5 persons surrender: வண்டலூரில் திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆராமுதன் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் உள்பட 5 பேர் சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

வண்டலூர் திமுக நிர்வாகி ஆராமுதன் கொலை வழக்கு
வண்டலூர் திமுக நிர்வாகி ஆராமுதன் கொலை வழக்கு

வண்டலூர் திமுக நிர்வாகி ஆராமுதன் கொலை வழக்கு

செங்கல்பட்டு: காட்டாங்குளத்தூர் திமுக வடக்கு ஒன்றியச் செயலாளராக இருந்து வந்தவர், ஆராமுதன். இவர் காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு துணை பெருந்தலைவராகவும் இருந்து வருகிறார். வண்டலூர் மேம்பாலம் கீழ்ப்பகுதியில் கட்சி அலுவலகம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், வண்டலூர் மேம்பாலம் அருகே புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையத்தைப பார்ப்பதற்காக, தனது காரில் ஆராமுதன் நேற்று (பிப்.29) இரவு வந்தபோது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள், திடீரென நாட்டு வெடிகுண்டுகளை காரின் மீது தூக்கி வீசி உள்ளனர்.

இதில் காரின் முன் பக்கம் முழுவதும் உள்ள கண்ணாடி உடைந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆராமுதன், காரில் இருந்து இறங்கி, அங்கிருந்து தப்பிச் செல்லும்போது மர்ம நபர்கள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக தாக்கி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதில், பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து அவர் உயிருக்கு போராடியுள்ளார். இதையடுத்து, அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, தகவல் அறிந்து சென்ற ஓட்டேரி போலீசார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குரோம்பேட்டை மருத்துவமனையில் அவருடைய உறவினர்கள், திமுகவினர் குவிந்ததால் பதற்றம் நிலவியது. இதனால் பாதுகாப்புக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதையடுத்து, இன்று (மார்ச் 1) காலை உடற்கூறு ஆய்வு முடிக்கப்பட்டு, உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து, வண்டலூரில் உள்ள அவரின் இல்லத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அங்கு ஏராளமான திமுகவினர், பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வண்டலூர் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால், அதிகப்படியான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஆராமுதன் உடலை நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்ட தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், குற்றவாளிகள் யார் என கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர்களைப் பிடிப்பதற்கு ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மண்ணிவாக்கம் அருகே திமுக பிரதிநிதி ஒருவரை ரவுடி கும்பல் ஒன்று மிரட்டியுள்ளது. இதையடுத்து, காட்டாங்குளத்தூர் ஒன்றியச் செயலாளர் ஆராமுதன், திமுக நிர்வாகி உடன் சென்று மணிவாக்கம் ஓட்டேரி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக, அந்த பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஸ்டெல்லா என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், ஸ்டெல்லா அவரது கூட்டாளிகளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு, போலீசார் வண்டலூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த நபர்களைப் பிடித்து விசாரித்த போது, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்ததையடுத்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தான், நேற்று (பிப்.29) இரவு ஆராமுதன் காரின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, இந்த கொலை தொடர்பாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஐந்து பேர் சரண் அடைந்துள்ளனர்.

இதில், வண்டலூரைச் சேர்ந்த முனீஸ்வரர் (22), மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சத்தியசீலன் (20), திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சம்பத்குமார் (20), மணிகண்டன் (19), திண்டுக்கல்லைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட ஐந்து பேரும், ஆஜராகி உள்ளனர்.

தற்போது, இந்த வழக்கு குறித்து விசாரணை செய்த நீதிபதி உமாதேவி, முனீஸ்வரன், சத்தியசீலன், சம்பத்குமார், மணிகண்டன் ஆகிய நான்கு பேரையும், கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் மார்ச் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கவும், 17 வயது சிறுவனை செங்கல்பட்டிற்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, போலீசார் குற்றவாளிகளை வேனில் ஏற்றி சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும், இந்த கொலை வழக்குக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் பிரபல ரவுடி கனகராஜன் என்பவரையும் போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர். மேலும் இந்தக் கொலையில் வேறு யாராவது சம்பந்தப்பட்டு உள்ளார்களா? எதற்காக இந்த கொலை செய்யப்பட்டது என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் வண்டலூர் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இதையும் படிங்க:பெங்களூரூ ஹோட்டலில் சிலிண்டர் வெடிப்பு - மீட்புப் பணி தீவிரம்!

Last Updated : Mar 2, 2024, 7:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details