தமிழ்நாடு

tamil nadu

ரத்தம் சிந்தி தடுப்பணையை உடைப்போம்.. ஆந்திர அரசுக்கு தமிழக விவசாய சங்கத்தினர் எச்சரிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 7:10 PM IST

Construction of dam in Palar: ஆந்திர அரசு தடுப்பணையைக் கட்டினால் பண்டைய கால மன்னர்கள் போல், விவசாயிகள் போர் தொடுத்து தடுப்பணையை ரத்தம் சிந்தி உடைப்போம் என ஆந்திர அரசுக்கு தமிழக விவசாய சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆந்திர அரசுக்கு தமிழக விவசாய சங்கத்தினர் எச்சரிக்கை
ரத்தம் சிந்தி தடுப்பணையை உடைப்போம்

ரத்தம் சிந்தி தடுப்பணையை உடைப்போம்

திருப்பத்தூர்:பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதைக் கண்டித்து, தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில் ஆந்திர அரசு கட்டியுள்ள பெரும்பள்ளம் தடுப்பணையின் மீது நின்று, தமிழக விவசாயிகள் இன்று (மார்ச் 5) போராட்டம் நடத்தினர்.

கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் பாலாறு, ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டர் தூரமும், தமிழகத்தில் 222 கிலோ மீட்டர் தூரமும் சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இந்நிலையில், 33 கிலோமீட்டர் தூரம் மட்டுமே பாயும் பாலாற்றில் ஆந்திர அரசு 22 தடுப்பணைகளைக் கட்டியுள்ளது. தற்போது பாலாற்றின் குறுக்கே 215 கோடி மதிப்பில் மேலும் ஒரு தடுப்பணையைக் கட்ட ஆந்திர அரசு பிப்.26 அன்று அரசாணையை வெளியிட்டுள்ளது.

இதனால் வட தமிழகத்தில் உள்ள திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசு வழக்கு தொடர்ந்த நிலையில், அதன் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அதனை மீறி ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணை கட்டுவதைக் கண்டித்து, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில், ஆந்திர அரசு கட்டியுள்ள பெரும்பள்ளம் தடுப்பணையின் மீது நின்று, தமிழக விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து விவசாயிகள் ஆந்திராவிற்குள் நுழைய காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், பெரும்பள்ளம் நுழைவு வாயிலில் தமிழக விவசாய சங்கத்தினர், ஆந்திர அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக விவசாய சங்கத் தலைவர் வேலுசாமி கூறுகையில், “தமிழகத்தை வறட்சி மாநிலமாக மாற்ற ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணையைக் கட்டியுள்ளது. ஆந்திர அரசு அத்துமீறி செயல்பட்டு கட்டும் தடுப்பணையை பண்டைய ராஜாக்கள் போல் விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு போர் தொடுத்து, அணையை ரத்தம் சிந்தி உடைப்போம்” என ஆந்திர அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: கல்பாக்கத்தில் ஈனுலை.. பிரதமர் மோடி விழாவை முதல்வர் புறக்கணித்தது ஏன்.. அறிவியலா? அரசியலா?

ABOUT THE AUTHOR

...view details