தமிழ்நாடு

tamil nadu

திருவாரூரில், டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு போராட்டம்; டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 8:25 PM IST

Thiruvarur Farmers Protest: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாகப் பரபரப்பு ஏற்பட்டது.

Farmers are protesting at Thiruvarur to support of farmers who are protesting in Delhi
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூரில் விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூரில் விவசாயிகள் போராட்டம்

திருவாரூர்: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று (பிப்.26) திருவாரூர் பனகல் சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, இதுவரை இரண்டு விவசாயிகள் உயிரிழந்துள்ள நிலையில், உடனடியாக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

அதோடு, நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசு உயர்த்த வேண்டும், காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியே தீருவேன் எனக் கூறும் கர்நாடக முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேகதாது அணையைக் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.

இதற்கிடையே, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளில் இரண்டு பேர் மட்டும், அருகில் இருந்த செல்போன் டவரின் மீது ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைக் குண்டுக்கட்டாகக் கைது செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.

இந்த கைது நடவடிக்கையின் போது விவசாயிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் அனைவரையும் இழுத்து வந்த காவல் துறையினர், அவர்களைக் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இதையும் படிங்க:சென்னை: திருமண பேனர் விவகாரத்தில் பொது இடத்தில் ஆபாசமாக பேசிய பெண் போலீஸ்.. மணக்கோலத்தில் போராட்டம் நடத்திய ஜோடி!

ABOUT THE AUTHOR

...view details