தமிழ்நாடு

tamil nadu

"24 மணி நேரம் கெடு.. குற்றத்தை நிரூபிக்காவிட்டால் பதவி விலகத் தயாரா?" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! - vijayabaskar accuses regupathy

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 9:19 PM IST

Updated : Apr 29, 2024, 11:08 PM IST

AIADMK Ex Minister Vijayabaskar: காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்ட குழாயை உடைத்து நீரைத் தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டிய நிலையில், என் மீதான குற்றத்தை அமைச்சர் நிரூபிக்காவிட்டால், அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Ex Minister Vijayabaskar
Ex Minister Vijayabaskar

புதுக்கோட்டை: காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாயை உடைத்துத் தனிப்பட்ட முறையில் விவசாயத்திற்கும், அவருடைய கல்லூரிக்கும் காவிரி நீரைப் பயன்படுத்துவதாகச் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் இந்தக் குற்றச்சாட்டுப் பொய்யான குற்றச்சாட்டு என்றும், தன்னுடைய பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில், கலவரம் உண்டாகும் வகையில், பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பில் மூன்று பிரிவின் (504, 505, 153a) கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அதிமுக வழக்கறிஞர்கள் அணியினர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய விஜயபாஸ்கர், "கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்திக்கும் போது தமிழக அரசு கோடை வெயிலில் தாக்கத்திலிருந்து பொதுமக்களை மீட்பதற்கு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தேன்.

உடனடியாகத் தமிழக முதலமைச்சர் அன்று மாலையே அரசு அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும், அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறித்து விளக்கமாக விளக்கிக் கூறியிருந்தார். இது வரவேற்கத் தகுந்த விஷயம்.

இதேபோன்று பொதுச் சுகாதாரத் துறை சார்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தேன். இதனைத் தொடர்ந்து பொதுச் சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூட்டத்தைக் கூட்டி ஆயிரம் இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார். இதுவும் வரவேற்கத் தகுந்த விஷயம்.

எதிர்க்கட்சி உறுப்பினராகப் பொதுமக்களின் பிரச்னையை குறித்தும், குடிநீர் குறித்தும் நான் குற்றம் சாட்டியிருந்தேன். உண்மை நிலவரத்தைக் குற்றச்சாட்டாகச் சொல்லி இருந்தேன். நான் அரசியலில் தடம் மாறாத ஆள் மட்டுமல்ல. அரசியலில் தடுமாறாத ஆள். ஆனால் அமைச்சர் ரகுபதியோ அரசியலில் தடம் மாறியவர்.

ஆகையால் தற்போது அவர் தடுமாறுகிறார். நேற்று அதிமுகவில் இருந்தார் இன்று திமுகவில் உள்ள அவர் நாளை எங்கு இருப்பாரோ. தன்னுடைய இருப்பை தலைமையில் நிரூபிப்பதற்காக ஒரு சில அபாண்டமான குற்றச்சாட்டுகளை என் மீது வைத்துள்ளார். மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை என்று நான் கூறியவுடன் தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதற்கு அவர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாமல் காவிரி கூட்டுக் குடிநீர்க் குழாயிலிருந்து தண்ணீர் எடுத்து நான் வயலுக்கு நீர் பாய்ச்சுகிறேன் என்று அபாண்டமான குற்றச்சாட்டைக் கூறினார். நான் அவருக்கு 24 மணி நேரம் தருகிறேன். அந்தக் குற்றச்சாட்டை அவர் 24 மணி நேரத்திற்குள் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

அரசியலில் எனக்கு எவ்வளவு சோதனைகள் வந்தாலும் நான் தடம் மாறாமல் தடுமாறாமல் இருக்கிறேன். கண்ணியமான வார்த்தையை நான் பயன்படுத்தி வருகிறேன். ஆனால் அமைச்சர் ரகுபதி அரசியல் சுய லாபத்திற்காக என் மீது வன்மத்தைக் கக்குகிறார்.

எனக்கும் ரகுபதிக்குமான பிரச்னையை நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பிரச்னையை யார் பார்ப்பது. நீதிமன்றத்தின் மூலமாக இந்த நிகழ்வுக்கு அவர் கூண்டில் ஏறி பதில் சொல்லும் நிலைமையை நான் உருவாக்குவேன்.

மூன்று ஆண்டு காலம் அமைச்சராக ரகுபதி உள்ளார். மூன்று ஆண்டு காலத்தில் அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டை மாவட்டத்திற்குச் செய்தது என்ன? என்ன திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு, திமுக 3 ஆண்டு காலம் நிதி ஒதுக்கவில்லை. நிதியைப் பெற்றுத் தருவதற்கு அமைச்சர் என்ன முயற்சி எடுத்தார்.

என் மீது அபாண்டமான பொய்யான குற்றச்சாட்டை வைத்த அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். என் மீது பொய்யான குற்றச்சாட்டைக் கூறியதற்கு ரகுபதி மீது என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் பொதுமக்களுக்குக் குடிப்பதற்குத் தண்ணீரைக் கொடுங்கள். அதன் பிறகு நீங்கள் பேசுங்கள்.

விஜயபாஸ்கர் குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தார் என்று ரகுபதி கேட்கிறார். ஆனால் அதிமுக ஆட்சிக் காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இரண்டு கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு அனுமதி வாங்கி ரூ.630 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அந்தக் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டதால் தான் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் கொஞ்சமாவது தண்ணீர் வருகிறது. விஜயபாஸ்கர் களத்தில் நிற்பான். களத்தில் நிற்பவன் தான் விஜயபாஸ்கர் அது என்னுடைய குணம்.

ஆனால், இதை திசை திருப்புவதற்காக இது போன்ற பேச்சுகளை அமைச்சர் ரகுபதி பேசுவது கண்டனத்துக்கு உரியது மட்டுமல்ல ஏற்புடையது அல்ல. அமைச்சர் ரகுபதி என்னை விட வயதில் மூத்தவர் என்னுடைய அப்பா வயது அவருக்கு, ஆகையால் நான் கண்ணியமாக அவர் மீதான விமர்சனத்தை வைக்கிறேன்.

இனியாவது அமைச்சர் ரகுபதி தனிப்பட்ட விமர்சனங்களைத் தனிப்பட்ட தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் அதிமுக இனி சும்மா இருக்காது. அமைச்சர் ரகுபதி குறித்து பல்வேறு விமர்சனங்களை நாங்கள் திருப்பி வைக்க வேண்டி இருக்கும்.

மேலும் அமைச்சர் ரகுபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் என் சார்பில் புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர அமைச்சர் ரகுபதி மீது நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும், வழக்கு தொடரப்படும்" என்றார்.

இதையும் படிங்க:"ஸ்ட்ராங் ரூம் சுற்றி ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்க வேண்டும்" - தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் என்.ஆர்.இளங்கோ வலியுறுத்தல்! - Strong Room Camera Issue

Last Updated :Apr 29, 2024, 11:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details