தமிழ்நாடு

tamil nadu

மன்னார்குடி ஈக்விடாஸ் வங்கி அடாவடி வசூல்; ரூ.5 லட்சம் அபராதம் விதித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 1:57 PM IST

Equitas Small Finance Bank: அடமான கடன் பெற்றவர் உயிரிழந்த பிறகும், அடாவடி வசூலில் ஈடுபட்டு கடன் பெற்றவரின் ஆவணங்களை தர மறுத்த மன்னார்குடி ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கிக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Rs 5 alakh fine to Equitas Bank
ஈக்விடாஸ் வங்கிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்

ஈக்விடாஸ் வங்கிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட காரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி. இவர் விவசாயக் கூலியாக உள்ளார். இவர் மன்னார்குடியில் உள்ள ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் (Equitas Small Finance Bank) தனது வீட்டை அடமானமாக வைத்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை, கடந்த 30.10.2019-ல் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த அடமானக் கடனிற்காக லைஃப் இன்சூரன்ஸ் ரூ.11,410; ஜெனரல் இன்சூரன்ஸ் ரூ.236; விபத்து காப்பீடாக ரூ.637; டாக்குமெண்ட் சார்ஜ் ரூ.1,357; பிராசஸிங் பீஸ் ரூ.5,900 மற்றும் இதர கட்டணம் ரூ.2,234 என மொத்தமாக ரூ.21,774 வசூலிக்கப்பட்டு மீதி தொகையை அவர் கடனாகப் பெற்றார்.

இந்த கடனுக்காக மாதாந்திர சுலப தவணை தொகையாக ரூ.7,050 ஒவ்வொரு மாதமும் தவறாமல் அவர் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில், வங்கி பணியாளர்கள் கடந்த 07.03.2023 அன்று இரவு 10 மணிக்கு மேல் நல்ல தம்பியின் வீட்டிற்குச் சென்று கடன் பாக்கி கேட்டதாகவும், அதற்கு நல்லதம்பி தவணை தொகையை 10ஆம் தேதி தானே கட்ட வேண்டும்? ஏன் ஏழாம் தேதியே கேட்கிறீர்கள்? என ஊழியர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்காக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் நல்லதம்பியை கீழே தள்ளிவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இதய நோயாளியான நல்லதம்பி, கடந்த 11.06.2023 அன்று உயிரிழந்தார். இதனையடுத்து, நல்லதம்பி இறந்த பிறகும் மூன்று மாத தவணை தொகையாக ரூ.21,105-யை மன்னார்குடி ஈக்விடாஸ் நிறுவனம் அவரது மனைவி ஜோதியிடம் இருந்து வசூலித்துள்ளது.

தங்களுக்கு இன்சூரன்ஸ் கிளைம் ஆகி உள்ளது என்றும் இனிமேல் கடன் தொகையை செலுத்தத் தேவையில்லை என்றும் ஈக்விடாஸ் தரப்பில் கூறிய நிலையில், அடமானம் வைக்கப்பட்ட வீட்டின் பத்திரம் மற்றும் தடையில்லா சான்றிதழ் கேட்டபோது ஈக்விடாஸ் நிறுவனத்தினர் 1 லட்சத்து 5 ஆயிரத்து 172 ரூபாய் செலுத்தினால் தான் வீட்டின் பத்திரம் மற்றும் தடையில்லா சான்று கிடைக்கும் என்று தொடர்ந்து அலைக்கழித்து வந்துள்ளனர்.

இந்த சூழலில், கடந்த 03.01.2024 அன்று இது குறித்து ஜோதி, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணையில், ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி நிறுவனம் இவ்வழக்கில் ஆஜராகாத நிலையில் ஜோதியின் புகார் மனு அனுமதிக்கப்பட்டு அவருக்குத் தடையில்லா சான்றும், கடன் பெற்றபோது கொடுத்த ஆவணங்களையும் திருப்பி வழங்க அந்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், சட்ட விரோதமான முறையில் வசூல் செய்த ரூ.21,105-யை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக 5 லட்சம் ரூபாயும் வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 5 லட்சத்து 31 ஆயிரத்து 105 ரூபாயை வழக்கு தாக்கல் செய்த நாள் முதல் 9 சதவீதம் வருட வட்டியுடன் மன்னார்குடி ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி நிறுவனம் வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சேகர் உறுப்பினர் லட்சுமணன் ஆகியோர் அதிரடி தீர்ப்பளித்தனர்.

இதையும் படிங்க:சட்டவிரோத குட்கா விற்பனை வழக்கு; பி.வி.ரமணா மீதான வழக்கு விசாரணை ஒத்திவைத்தது சிபிஐ நீதிமன்றம்..

ABOUT THE AUTHOR

...view details