தமிழ்நாடு

tamil nadu

நாம் தமிழருக்கு கரும்பு விவசாயி கிடைக்காதது ஏன்? தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் கூறுவது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 9:17 PM IST

Election Commission of India: அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சி என்பதால் நாம் தமிழர் கட்சியின் சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு அரசியல் கட்சியை மாநில கட்சியாகவோ, தேசிய கட்சியாகவோ அங்கீகரிப்பதற்கு தேர்தல் ஆணையம் விதிக்கும் நிபந்தனைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

election commission conditions for recognition of a political party
அரசியல் கட்சியை அங்கீகரிக்க தேர்தல் ஆணையம் விதிக்கும் நிபந்தனைகள்

சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி, வேட்பாளர் அறிவிப்பு என தீவிரமாகத் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு, இம்முறை அந்த சின்னம் கிடைக்காமல் போயுள்ளது.

இதனை அடுத்து, நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்திற்காக நீதிமன்றத்தில் முறையிட்டது. அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருக்கும் நாம் தமிழர் கட்சி, ஒரு குறிப்பிட்ட சின்னத்தை எப்படி கோர முடியும் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை நகர்வின் அடுத்த கட்டத்திற்காக தற்போது நாம் தமிழர் கட்சி காத்திருக்கிறது.

நாம் தமிழர் கட்சி நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தொடர்ச்சியாக போட்டியிட்டு வருகிறது. அக்கட்சி வேட்பாளர்கள் மக்களவைக்கோ, சட்டமன்றத்திற்கோ மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும், அக்கட்சி கணிசமான வாக்கினை ஒவ்வொரு தேர்தலிலும் பெற்று வருகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கக் கோரிய நிலையில், அதனை வேறு கட்சிக்கு வழங்கிவிட்டதாகக் கூறி தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்ததை அடுத்தே, அக்கட்சி கரும்பு விவசாயிகள் சின்னத்தில் போட்டியிட்டது. தற்போது இந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி கோரியுள்ள சின்னம் மறுக்கப்பட்டிருப்பது, அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட நிபந்தனைகள்:ஒரு அரசியல் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரத்தைப் பெற கீழுள்ள நிபந்தனைகளில் தகுதி பெற்றிருக்க வேண்டும். இதன்படி,

மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவாகிய மொத்த வாக்குகளில் 6 சதவீதம் வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், அந்த தேர்தலில் அக்கட்சி உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 2 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

அதேபோல, நாடாளுமன்றத் தேர்தலில் அம்மாநிலத்தில் பதிவாகிய வாக்குகளில் 6 சதவீதம் வாக்குகளுடன் குறைந்தபட்சம் 1 நாடாளுமன்றத் தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

தற்போது விதிகள் தாரளமாக்கப்பட்டுள்ளதன் படி, மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெற்றி பெறவில்லை என்றாலும், பதிவான வாக்குகளில் அக்கட்சி 8 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.

தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட நிபந்தனைகள்:ஒரு கட்சி தேசிய கட்சி அங்கீகாரத்தைப் பெற கீழுள்ள நிபந்தனைகளில் தகுதி பெற்றிருக்க வேண்டும். இதன்படி,

நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டமன்றத் தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் பதிவாகும் மொத்த வாக்குகளில் 6 சதவீத வாக்குகள் பெறுவதோடு, அம்மாநிலத்தில் உள்ள தொகுதிகளில் 2 சதவீத தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

ஒரு அரசியல் கட்சி தேசிய கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கு 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகள் அனைத்தும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல்களின் முடிவுகளை வைத்து, கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தது. இதனை 2016ஆம் ஆண்டு திருத்திய தேர்தல் ஆணையம், தற்போது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நிபந்தனைகள் அடிப்படையில் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கவுள்ளது.

இதையும் படிங்க: கைவிட்டுப் போனது 'கரும்பு விவசாயி சின்னம்' - நாம் தமிழர் கட்சிக்கு நீதிமன்றம் கூறிய அறிவுரை என்ன?

ABOUT THE AUTHOR

...view details