தமிழ்நாடு

tamil nadu

"அடுத்த 7 ஆண்டுகளில் தமிழகமே சீரழிந்துவிடும்”.. ஆளுநரைச் சந்தித்தபின் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 10, 2024, 4:12 PM IST

Delhi Drugs Issue: போதைப்பொருள் விவகாரத்தில் ஜாபர் சாதிக் பிடிபட்ட பிறகு, அவருக்கும், தமிழக காவல்துறைக்கும் தொடர்பு உள்ளதோ என நினைக்கத் தோன்றுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Delhi Drugs Issue
போதைப்பொருள் கடத்தல் விவகாரம்

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து, அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஏழு பக்கங்கள் கொண்ட புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

கடந்த மாதம் டெல்லியில் 50 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், தொடர்ச்சியாக திமுகவுக்கு எதிராகக் கண்டனங்களை அதிமுக பதிவு செய்து வந்தது.

மேலும், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக போதைப்பொருள் விவகாரம் அதிகரித்து வருவதாகவும், இதனை திமுக அரசு கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும் கூறி அதிமுகவினர் போராட்டங்களை நடத்தி வந்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வரும் 12ஆம் தேதி அதிமுக சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க தவறிய திமுக அரசின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விசாரணை செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும் எனவும், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் எவ்வளவு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்ற விவரங்களையும் அந்த மனுவில் சேர்த்து வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் நிலவும் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து ஏற்கனவே பலமுறை ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம். தற்போது பிடிபட்டிருக்கும் திமுக அயலக அணியில் நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக், திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து 45 முறை வெளிநாடுகளுக்கு போதைப்பொருளைக் கடத்தி உள்ளது போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக், தமிழக டிஜிபியிடமே நற்சான்றையும், நன்மதிப்பையும் பெற்றவர். அதோடு மட்டுமின்றி தமிழக முதலமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரிடையே நெருக்கமாக பழகி புகைப்படங்களை எடுத்தது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.

திமுக அயலக அணி நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் பிடிபட்ட அடுத்த 10 நாளில், தமிழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பிடிபடுவதை பார்க்கும் பொழுது, ஜாபர் சாதிக்கிற்கும், தமிழக காவல்துறைக்கும் தொடர்பு உள்ளதோ என எண்ண தோன்றுகிறது. தமிழகத்தில் நிலவும் போதைப்பொருள் நடமாட்டத்தை உடனடியாக கட்டுப்படுத்தவில்லை என்றால், அடுத்த 7 ஆண்டுகளில் தமிழகமே சீரழிந்துவிடும்”எனக்கூறினார்.

இந்த நிகழ்வில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், அதிமுக அமைப்புச் செயலாளர் தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:“அவசரகால பதற்றமே மோடியின் முகத்தில் பயமாக உள்ளது”.. ஸ்டாலின் கடும் விமர்சனம்!

ABOUT THE AUTHOR

...view details