தமிழ்நாடு

tamil nadu

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - அமலாக்கத்துறை பதில் மனு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 1:58 PM IST

Senthil Balaji Bail Petition: செல்வாக்கு மிக்கவரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தக்கூடும் என்பதாலும், அவரது சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக உள்ளதாலும், அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை ஜனவரி 12ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

பின்னர், 19வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு, பிப்ரவரி 15 வரை நீதிமன்றக் காவலில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, கைதாகி 250 நாட்களைக் கடந்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், வழக்கு ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதா என்பதை விசாரணையில்தான் நிரூபிக்க முடியும் என முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு என கூறப்பட்டுள்ளது. மேலும், சந்தர்ப்ப சூழ்நிலை மாறவில்லை, சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக உள்ளார் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறிய நிலையில், ஆவணங்கள் திருத்தப்பட்டதே, சந்தர்ப்ப சூழ்நிலை மாற்றமாக கருதுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், “நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிதான் வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தி வருகிறார். வழக்கின் விசாரணையைத் துவங்க அமலாக்கத்துறை தயாராக இருக்கிறது.

செல்வாக்கான அவருக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும். ஒரே காரணத்தை அடிப்படையாக வைத்து, மீண்டும் இந்த ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆரம்பகட்ட ஆதாரங்கள் இருப்பதாக முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளன.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாக உள்ளார். ஆவணங்களை திருத்தியதாக செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு தவறு. எனவே, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்” எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (பிப்.14) பிற்பகல் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி ராஜினாமா - ஆளுநர் ஒப்புதல்!

ABOUT THE AUTHOR

...view details