தமிழ்நாடு

tamil nadu

குமரி மாவட்டத்தில் நளிவடையும் அரசு கேபிள்..! அமைச்சர் மனோ தங்கராஜின் மகன் நெருக்கடி தான் காரணம் - மாவட்ட பஞ்சாயத்து தலைவர் குற்றச்சாட்டு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 10:09 AM IST

Mano Thangaraj: கன்னியாகுமரி மாவட்டத்தில், அமைச்சர் மனோ தங்கராஜின் மகன் நெருக்கடி காரணமாக அரசு கேபிள் டிவி இணைப்பு 15 ஆயிரமாகக் குறைந்து விட்டதாகவும், தமிழக பட்ஜெட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தைப் புறக்கணித்து விட்டதாக மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் மெர்லியன்ட் தாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

District panchayat merliant das accused minister mano thangaraj son is reason for decline in cable users
மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் மெர்லியன்ட் தாஸ் பேட்டி

மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் மெர்லியன்ட் தாஸ் பேட்டி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நாஞ்சில் கூட்ட அரங்கில் மாவட்ட ஊராட்சி சாதாரண கூட்டம் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அனைத்து துறைகளிலிருந்தும் அலுவலர்கள், அதிகாரிகள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் விவாதிக்கப்பட்டது.

தீர்மானங்கள்:கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் கோயில் துக்க திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும்.

திக்கணம்கோடு பகுதியில் செயல்படும் இரண்டு அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை மாற்ற வேண்டும், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழாவிற்கு மகளிருக்குத் தனியாக இலவச பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் மெர்லியன்ட் தாஸ், "இரண்டரை வருடங்களுக்கு முன்பு வரை அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் மாவட்ட ஊராட்சி கூட்டங்களுக்கு வந்த நிலையில் பல பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டன.

அதன்பின் நடைபெற்ற அனைத்து கூட்டங்களுக்கும் துறை சார்ந்த அதிகாரிகள் வருவதில்லை. தற்போது மாநில அரசிலிருந்து மாதம் தோறும் வருகின்ற பொது நிதிகள் தற்போது வருவதில்லை. கடிதங்கள் மட்டுமே கிடைக்கிறது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நிதி சரியான முறையில் வந்தது.

திமுக ஆட்சியில் நிதிகள் வருவதில்லை. மத்திய அரசிடம் இருந்து வரக்கூடிய 15வது நிதிக்குழு மானியத்தின் நிதி மட்டும் சரியான முறையில் வருகிறது. 150க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் மாவட்ட பஞ்சாயத்தால் நிறைவேற்றப்பட்டு அரசிற்கு அனுப்பப்பட்டும் எந்த ஒரு தீர்மானமும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைவேற்றவில்லை.

மாநில அரசின் பட்ஜெட் கன்னியாகுமரி மாவட்டத்தைப் புறக்கணிக்கும் பட்ஜெட்டாக உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சிப் பணிகளுக்கான எந்த திட்டங்களையும் மாநில அரசு அறிவிக்கவில்லை.

கடந்த 2021ஆம் ஆண்டு அரசு கேபிள் இணைப்பு ஒன்றரை லட்சத்திற்கு மேலாக இருந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு தற்போது 15 ஆயிரம் இணைப்பாக குறைந்து உள்ளது. மேலும், இதற்கு முக்கிய காரணமாக இருப்பது அமைச்சர் மனோ தங்கராஜ் தான்.

அவரது மகன் தனியார் கேபிள் இணைப்பை தொழிலாக நடத்தி வருவதால் அரசு கேபிள் இணைப்பு வைத்திருக்கும் இடங்களில் நெருக்கடி கொடுத்து அவரது தொழிலை மேம்படுத்தி வருகிறார். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு கேபிள் இணைப்பு குறைந்து உள்ளதாக குற்றம் சாட்டினார்.

கன்னியாகுமரி மாவட்ட கோயில்களில் யானை ஊர்வலம் கடந்த 6 மாத காலமாக தடைபட்டுள்ளதாகவும், அமைச்சர் மனோ தங்கராஜ் தலையீட்டால் கோயில் விழாக்களில் யானை ஊர்வலம் தடைபட்டு உள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து, மாவட்டத்தில் 4 ஆயிரத்து 600 விண்ணப்பதாரர்கள் புதிதாக ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர், அவர்களுக்கு உடனடியாக ரேஷன் கார்டுகளை கொடுக்க அரசு முன்வர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு..! மாவட்ட ஆட்சியர்களுக்கு முதன்மை செயலாளர் கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details