தமிழ்நாடு

tamil nadu

“இது குறித்து ஒருநாள் பேசுவோம்” - தொடர்ச்சியான விசாரணை குறித்து இயக்குநர் அமீர் விளக்கம்! - Director Ameer

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 10, 2024, 12:36 PM IST

Updated : Apr 10, 2024, 12:45 PM IST

Director Ameer in Jaffar Sadiq Drug Smuggling case: ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கு விவகாரத்தில், என் மீதான குற்றச்சாட்டை எப்போதும் எதிர்கொள்ளவும், நான் குற்றமற்றவன் என்பதை நிருபிப்பேன் எனவும் மதுரையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி, சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

Director Ameer
Director Ameer

ரம்ஜான் சிறப்பு தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் அமீர்

மதுரை: ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில், ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்ததாக மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர், டெல்லியில் திரைப்பட இயக்குநர் அமீரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, அமீர் தனக்கு அமலாக்கத்துறையிடம் இருந்து அழுத்தம் ஏதும் கொடுக்கப்படுகிறதா என மதுரையில் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கம் தந்துள்ளார்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு திடல் தொழுகையில் இயக்குநர் அமீர் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் அமீர், 'ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பு நேற்று முடித்து, இன்று ரம்ஜான் பண்டிகையை (Ramadan festival) மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறோம். அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

இதையடுத்து, அமலாக்கத்துறை சோதனை தொடர்பான கேள்விக்கு, 'என்ன எடுத்தார்கள் என்று சொல்ல முடியாது. மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் (NCB) 11 மணி நேர விசாரணை மற்றும் அமலாக்கத்துறை (ED) ரெய்டு நடந்தது உண்மைதான். ஆனால், என்ன எடுத்துள்ளார்கள் என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்.

இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்து நான் சொல்வது ஒன்றுதான். எந்த விசாரணைக்கும் நான் தயார். என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நிரூபிப்பேன். 'இறைவன் மிகப்பெரியவன்' என்பதுதான் என்னிடம் வரும் வார்த்தை' என்று பதிலளித்தார்.

டார்கெட் செய்து விசாரணை நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, 'உறுதியாக சொல்ல முடியாது. இது குறித்து ஒருநாள் பேசுவேன்” என்றார். அமலாக்கத்துறை ரெய்டில் உள்நோக்கம் உண்டா என்ற கேள்விக்கு, ‘இதனை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், என்னால் ஒரு மாதமாக பேச முடியவில்லை என்பது உண்மை' எனத் தெரிவித்தார்.

அமலாக்கத்துறை விசாரணை நேர்மையாக உள்ளதா என்ற கேள்விக்கு, விசாரணை நேர்மையாக நடைபெறுகிறது என்றும், விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா, இல்லையா என்பது எனக்கு தெரியாது எனவும், நேற்றிரவு (ஏப்.9) அமலாக்கத்துறை சோதனை முடிவடைந்தது. இது குறித்து முழுமையாக பேச கொஞ்சம் நேரம் தாருங்கள் என்றார்.

முன்னதாக, சென்னையில் இயக்குநர் அமீரின் வீடு மற்றும் அவரது அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையில், முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பான எந்த தகவலும் முழுமையாக இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஜாபர் சாதிக் வழக்கு விவகாரம்; இயக்குனர் அமீர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் அமலக்காத்துறை சோதனை - ED Raid In Chennai Ameer House

Last Updated : Apr 10, 2024, 12:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details