தமிழ்நாடு

tamil nadu

திருக்குறளைப் புகழும் மோடி.. அதை ஏன் தேசிய நூலாக அறிவிக்கவில்லை? - சி.வி.சண்முகம் கேள்வி - CV SHANMUGAM

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 8:42 AM IST

Updated : Mar 27, 2024, 10:44 AM IST

C.V.Shanmugam: செல்லும் இடங்களில் எல்லாம் திருக்குறள் சிறந்த நூல் எனப் புகழும் பிரதமர் மோடி, அதனை தேசிய நூலாக அறிவிக்காதது ஏன்? என மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் கேள்வியெழுப்பியுள்ளார்.

AIADMK Ex Minister CV Shanmugam
அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்

விழுப்புரம்:2024 நாடாளுமன்ற தேர்தலில், விழுப்புரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பாக்யராஜின் அறிமுக கூட்டம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் பங்கேற்று பேசினார்.

அப்போது பேசிய அவர், "சாதாரண மனிதர்களை வேட்பாளராக நிறுத்துகிற இயக்கம் அதிமுக. 1972-ல் இருந்து இதைத்தான் செய்து வருகிறது. பாஜக அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி அதிமுகவையும், சின்னத்தையும் முடக்க நினைக்கிறது. மேலும், தேர்தல் விதிமுறைகளை திமுக மீறி உள்ளது. குறிப்பாக, விழுப்புரத்தில் பொன்முடி காரில் வந்து வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் கலந்து கொண்டார்.

தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் நியாயமான முறையில் நடக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. ஆளுங்கட்சிக்கு துணை போகும் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளோம். திமுக அமைச்சர்கள் இப்போது அவர்களுடைய வழக்குகளைப் பற்றி தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

வட மாநிலங்களில் உதயநிதி மீது வழக்கு தொடுக்க தயாராகி வருகிறார்கள். திமுகவிற்கு போடும் ஒவ்வொரு ஓட்டும், பாஜகவிற்கு போடும் ஓட்டு என்பதை மறந்துவிடக்கூடாது. மதத்தின் பெயரால் பிரிவினையை உருவாக்கும் கட்சி தான் பாஜக. மோடி மீண்டும் மீண்டும் வேண்டும் என்கிறார்கள். ஆனால், நாங்களோ வேண்டாம் என்கிறோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில், நான்கு சீட்டுகளை பாஜகவுக்கு பிச்சை போட்டது, அதிமுக. மழை, வெள்ளம் வரும்போதெல்லாம் வரமாட்டார், மோடி.

தேர்தல் வரும்போது தான் தமிழகத்திற்கு வருவார். மோடி ஆட்சியால் இந்தியாவில் ஜனநாயகத்திற்கு ஆபத்து, தனிமனித சுதந்திரத்திற்கு ஆபத்து. மோடி போதுமடா சாமி. நீ பத்தாண்டு ஆண்டது போதும் எங்களை விட்டுவிடு.
தமிழ்நாடு கஞ்சா, போதை மற்றும் பாலியல் தொந்தரவுகள் அதிகமான ஆட்சியாக ஆகிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை உண்டாக்கியது.

திருக்குறள் தான் சிறந்த நூல் என்று மோடி சொல்லுகிறார். பின்னர் ஏன் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவில்லை? தமிழக அரசு மது விற்பனையில் தான் முன்னோடியாக இருக்கிறது. தொடர்ந்து செயல்வீரர்கள், அதிமுகவுக்கு வாக்கு சேகரிக்கின்ற வேலையில் ஈடுபட வேண்டும். மேலும், பாமாகவை பற்றி விமர்சித்த சி.வி.சண்முகம், எங்களுடன் கூட்டணி தொடர்பாக பேசிக்கொண்டே பெட்டி வாங்குவதற்காக பாஜகவுடன் சென்று விட்டார்கள்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:“பாஜகவும் அதிமுகவும் மக்களைச் சீரழித்து வருகின்றனர்” - குமரி அதிமுக வேட்பாளர் பேச்சால் பரபரப்பு! - ADMK Candidate Criticized ADMK

Last Updated : Mar 27, 2024, 10:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details