தமிழ்நாடு

tamil nadu

4 அரிய வகை வெள்ளை கிளிகள் பறிமுதல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு! - White parrots in Chennai

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 2:53 PM IST

White parrot seized in Chennai Airport: மலேசிய நாட்டிலிருந்து சென்னை வந்த விமானத்தில் கொண்டு வரப்பட்ட அரிய வகை 4 வெள்ளைக் கிளிகளைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், நோய் பரவும் அபாயம் உள்ளது எனக் கூறி மீண்டும், மலேசியாவுக்கே திருப்பி அனுப்பி வைத்தனர்.

White parrot seized in chennai airport
White parrot seized in chennai airport

சென்னை:மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) நள்ளிரவு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல் சோதனை செய்தனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த முகமது ராஜா (28), ரமீஷ் ராஜா (27) என்ற இரண்டு பயணிகள் கையில் பெரிய பிளாஸ்டிக் கூடைகளுடன் வந்துள்ளனர்.

மேலும், அந்த கூடைகளில் காற்று செல்வதற்கு வசதியாக துவாரங்கள் இருந்துள்ளது. அதனால் சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள், அந்த இரு பயணிகளை நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதோடு, அவர்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடைகளை திறந்து பார்த்து பரிசோதித்துள்ளனர். அப்போது, அந்த இரு கூடைகளிலும், வெள்ளை நிறத்தில் உள்ள அபூர்வ வகை கிளிகள் 4 இருந்தது தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, அந்த 2 பயணிகளையும் வெளியே விடாமல் நிறுத்தி வைத்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையில், "நாங்கள் மலேசிய நாட்டில் இருந்து, இந்த அபூர்வ வகை வெள்ளைக் கிளிகளை எங்களுடைய சொந்த உபயோகத்திற்காக வாங்கிக் கொண்டு வருகிறோம். இது ஆபத்தான பறவை அல்ல. வீட்டில் செல்லமாக வளர்க்கக்கூடிய கிளிகள் போன்ற பறவைகள் தான். இவைகளை இரண்டு ஜோடிகளாக நாங்கள் வாங்கி வந்திருக்கிறோம்.

மேலும், இந்த கிளிகளை இனவிருத்தி செய்ய வைத்து, இந்தியாவில் உற்பத்தி செய்வது தான் எங்கள் நோக்கம். அதுமட்டுமின்றி திரைப்பட படப்பிடிப்பு, குறிப்பாக சின்னத்திரை, யூடியூப் சேனல் போன்றவைகளில் இதை பயன்படுத்துவோம். அதற்கு முன்னதாக இந்த வெள்ளைக் கிளிகளுக்கு பேசுவதற்கும், பல்வேறு சாகசங்கள் செய்வதற்கும் பயிற்சிகள் கொடுப்போம்" என்று கூறியுள்ளனர்.

ஆனாலும், சுங்க அதிகாரிகள் அதை முழுமையாக நம்பாமல், சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வன உயிரினங்கள் பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் சென்னை விமான நிலையம் விரைந்து வந்த மத்திய வன உயிரின பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், அந்த அரிய வகை வெளிநாட்டுக் கிளிகளை ஆய்வு செய்தனர். அதோடு, அந்த வெளிநாட்டுக் கிளிகளை கடத்தி வந்த பயணிகளிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

அப்போது இந்த வெளிநாட்டுக் கிளிகள், கக்காட்டூஸ் (Cockatoos) என்ற ரகத்தைச் சேர்ந்த அபூர்வ வெள்ளை கிளிகள் என்று தெரிய வந்துள்ளது. இந்த அபூர்வ வெள்ளைக் கிளிகள் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற குளிர் பிரதேசங்களில் அதிகமாக காணப்படும். அதே நேரத்தில் இந்திய நாட்டிற்குள், இந்த அபூர்வ வகை வெள்ளைக் கிளிகளை கொண்டு வருவதற்கு முறையான அனுமதி எதுவும் இவர்கள் பெறவில்லை.

அதோடு, இந்த கிளிகளுக்கு நோய் கிருமிகள் எதுவும் இல்லை என்பதற்கான மருத்துவப் பரிசோதனை சான்றிதழும் இல்லை. இந்த நிலையில், இக்கிளிகளை இந்தியாவிற்குள் அனுமதித்தால், அதன் மூலம் வெளிநாட்டு நோய் கிருமிகள் அல்லது வைரஸ் இந்தியாவில் பரவி, மனிதர்கள் மற்றும் விலங்குகள், பறவைகள் போன்ற அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த 4 கிளிகளையும், எந்த நாட்டில் இருந்து வந்ததோ, அந்த நாட்டுக்கே மீண்டும் திருப்பி அனுப்ப வேண்டும்.

அதற்கான செலவுகளை கிளிகளை கொண்டு வந்த இரு பயணிகளிடம், அபராதத்துடன் வசூலிக்க வேண்டும் என மத்திய வன உயிரின பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, இந்த 4 அரிய வகை வெள்ளைக் கிளிகளும், மலேசிய நாட்டிற்கு நேற்று (புதன்கிழமை) இரவு விமானம் மூலம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: “பிரதமர் மோடியின் வாக்குறுதிகளுக்கு கேரண்டியும் இல்லை.. வாரண்டியும் இல்லை" - மு.க.ஸ்டாலின் தாக்கு! - MK Stalin Campaign

ABOUT THE AUTHOR

...view details