தமிழ்நாடு

tamil nadu

கடலூரில் திமுகவினர் தாக்குதலா? அண்ணாமலை கண்டனம் - காவல்துறை விளக்கம்! - Annamalai K

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 9:58 PM IST

Cuddalore issue: கடலூரில், திமுகவினரால் குடும்பத்தினர் திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்து, அதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனால், இதற்கு கடலூர் காவல்துறை மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவரும், அக்கட்சியின் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “கடலூர் மாவட்டம், ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்பவர், வாக்குப் பதிவு நாளன்று, குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

தேர்தலில், தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக, திமுகவினர் இந்தப் பாதகச் செயலை செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினரை, இன்னும் இந்த திமுக அரசு கைது செய்ததாகத் தெரியவில்லை.

அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையைக் கூட, தங்கள் விருப்பப்படிதான் நடத்த வேண்டும் என்ற திமுகவின் சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயகத்துக்கு மிகுந்த ஆபத்தானது. இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், முதலில் தனது கட்சிக்காரர்களிடம் இருந்து தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்க வேண்டும். உடனடியாக, இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து, கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கடலூர் மாவட்ட காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தியில், “கடந்த ஏப்ரல் 19 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில், ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

ஒருபுறம் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ், மற்றொரு பக்கம் ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ்.

ஜெயசங்கரின் மகள் ஜெயப்பிரியாவை கிண்டல் செய்ததற்காகவும். ஜெயக்குமாரை தாக்கியதாக அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு, கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காகவும், தன்னெழுச்சியாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி (ஜெயக்குமாரின் மனைவி) தலையிட்டு, பிரச்னையை தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது.

கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஸ்ரீமுஷ்ணம் PS Cr.No. 96/2024 U/s 147, 148, 294 (b), 323, 324, 506(ii), 302 IPC r/w 4 of TN துன்புறுத்தல் தடைச் சட்டம் வழக்கு ஏப்ரல் 20 அன்று 01.00 மணிக்கு பதிவு செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில், கலைமணி, தீபா, ரவி மேகநாதன் மற்றும் அறிவுமணி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு, ஏப்ரல் 20 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கண்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பதும், வீடியோவில் குறிப்பிட்டுள்ளபடி குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறான கூற்றாகும். மேலும், இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"வேலூரில் மூன்று பஞ்சாயத்துகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும்" - ஏ.சி.சண்முகம் கோரிக்கை - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details