தமிழ்நாடு

tamil nadu

''வரிப்பகிர்வு மட்டுமின்றி வெள்ள நிவாரண நிதி ஒதுக்குவதிலும் ஓரவஞ்சனை'' - சிபிஐஎம் கண்டனம்! - CPIM Balakrishnan about relief fund

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 8:56 PM IST

CPIM Executive Committee meeting: தமிழ்நாட்டிற்கு வரிப் பகிர்வு மட்டுமின்றி, வெள்ள நிவாரண நிதி ஒதுக்குவதிலும் ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை தொடர்வதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கமாட்டார்கள் என சிபிஐஎம் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துத்துள்ளார்.

மத்திய அரசை கண்டித்த சிபிஐஎம் கே.பாலகிருஷ்ணன்
வரி பகிர்வு மட்டுமின்றி வெள்ள நிவாரண நிதி ஒதுக்குவதிலும் ஓரவஞ்சனை

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இன் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஏப்.27) சென்னையில், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு;

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழ்நாடு - புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும் என்ற மகிழ்ச்சியான நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது இதயப் பூர்வமான நன்றியினை உரித்தாக்குகிறது.

இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு கடுமையான கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் இரவு, பகலாக தீவிர அரசியல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், தோழமை கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவருக்கும் சிபிஐஎம் மாநில செயற்குழு நன்றியினையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் களப்பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், வர்க்க - வெகுஜன அமைப்புகளுக்கும் மாநில செயற்குழு தனது நெஞ்சார்ந்த பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

பாஜக அரசின் பாரபட்சமான நடவடிக்கை:தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் மற்றும் பெருமழை வெள்ளத்தினால் தமிழ்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்கிட வேண்டுமென ஒன்றிய அரசை வற்புறுத்தியது. ஒன்றிய பாஜக அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காத நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.276 கோடி ரூபாய் மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. இது தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் வஞ்சிக்கும் செயலாகும். இந்த ஒன்றிய பாஜக அரசின் பாரபட்சமான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

கடுமையான பாதிப்புகளைச் சந்தித்த தமிழ்நாட்டிற்கு ரூ.276 கோடி மட்டுமே ஒதுக்கியிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்ல, ஒன்றிய அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கையாகும். கூட்டாட்சி கோட்பாட்டிற்கும், மாநில உரிமைக்கும் எதிரானதாகும். தமிழ்நாட்டிற்கு வரிப்பகிர்வு மட்டுமின்றி வெள்ள நிவாரண நிதி ஒதுக்குவதிலும் ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை தொடர்வதை தமிழ்நாடு மக்கள் ஏற்கமாட்டார்கள்.

எனவே, ஒன்றிய அரசு தனது அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கையை கைவிட்டு, மிக்ஜாம் புயல் மற்றும் பெருமழை வெள்ள நிவாரணத்திற்கு தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூ.38 ஆயிரம் கோடியை உடனடியாக தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டுமென சிபிஐஎம் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

ஏரி, குளங்களை தூர்வார சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்:தமிழ்நாட்டில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பல ஏரிகளின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. கடலூர், ராமநாதபுரம், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இந்நிலையில், குடிநீர் பற்றாக்குறையைப் போக்கிட முதலமைச்சர், அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வறட்சி பாதித்த 22 மாவட்ட மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. இருப்பினும், தமிழ்நாட்டு மக்களுக்கு தங்கு தடையின்றி சீரான குடிநீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபிஐஎம் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டில் வீராணம் ஏரி உள்பட பல ஏரிகள், குளங்கள் காய்ந்துள்ளன. இந்த ஏரி, குளங்களை உடனடியாக தூர்வாரினால் ஏராளமான பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, மழைக்காலங்களில் மழை நீரைச் சேமிக்க வழிவகுக்கும். எனவே, ஏரி, குளங்களை தூர்வாருவதற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, போர்க்கால அடிப்படையில் பணிகளைத் துவக்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு! - MK Stalin On Summer Actions

ABOUT THE AUTHOR

...view details