தமிழ்நாடு

tamil nadu

இந்தியா-இலங்கை இடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவை விரைவில் கூட்ட வேண்டும் - மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 8:10 PM IST

TN Fishermen arrested: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும், இந்தியா-இலங்கை இடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவை விரைவில் கூட்டிடவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்
இந்தியா-இலங்கை இடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவை விரைவில் கூட்ட வேண்டும்

சென்னை:தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 15 மீனவர்கள் இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி முதலமைச்சர் ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (மார்ச்.15) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர், இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் அடிக்கடி கைது செய்யப்படுவது குறித்து, தான் ஏற்கெனவே பலமுறை கடிதம் எழுதியுள்ளதாகவும், கடந்த வாரம் எழுதியிருந்த கடிதத்தில் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 22 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தான் கோரியிருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் உட்பட 15 மீனவர்களும், அவர்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்று மீனவர்களைக் கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைவதுடன், மாநிலத்தில் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவ சமூகத்தினரிடையே, பெரும் கொந்தளிப்பையும் விரக்தியையும் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால், இப்பிரச்சனைக்குத் தூதரக நடவடிக்கையின் மூலம் தீர்வு காண வேண்டியது மிக அவசியம் என முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி அதன் மூலம் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அதிகாரிகளை வலியுறுத்த வேண்டுமென்றும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்றும் ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: தேர்தலில் வன்முறைக்கு திட்டமா? - பயங்கர ஆயுதங்களுடன் கைதான ரவுடிகள்!

ABOUT THE AUTHOR

...view details