தமிழ்நாடு

tamil nadu

திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க முறைகேடு வழக்கு: காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 3:48 PM IST

திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க முறைகேடு புகார் தொடர்பாக 2016ஆம் ஆண்டு முதல் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என காவல்துறை ஆய்வாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2016ஆம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராய நகர் காவல்நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடக்காததால், உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நான்கு மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததது.

ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் போலீசார் விசாரணை முடிக்கவில்லை என ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் செயலாளரும், நடிகருமான இளவரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்த போது, கடந்த 2023 டிசம்பர் 12ஆ ம்தேதி இளவரசு காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததாக போலியாக தெரிவிப்பதாக காவல்துறை சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, நடிகர் இளவரசுவின் தொலைபேசி பதிவுகள் மற்றும் லொகேசன் காவல்துறை சார்பில் சமர்பிக்கப்பட்டது. அதில், காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்கவில்லை என்பது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து தவறான தகவலை தெரிவித்ததற்காக பகிரங்க மன்னிப்பு கோரினார்.

இந்த வழக்கு இன்று (ஜன.30) நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்த போது, இளவரசு மன்னிப்பு கோரியதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 2016ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட புகாரில் 8 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறை விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளது ஏற்க முடியாது.

அனைத்து வழக்குகளிலும் காவல்துறை மெத்தனமாகவே நடந்த கொள்கிறது. நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையின் செயல் கண்டனதிற்குரியது. சங்க நிதியை முறைகேடு செய்ததாக தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத காவல்துறை, சாதாரண மனிதர்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதுபோல பல வழக்குகளில் காவல்துறை தாமதமாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்கிறது. அதனால், சங்க முறைகேடு தொடர்பாக 2016இல் கொடுக்கப்பட்ட புகார் மீது 8 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகள் பிப்ரவரி 5ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நீதிமன்றத்தில் பொய் சொல்ல வேண்டாம் - நடிகர் இளவரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details