தமிழ்நாடு

tamil nadu

ஆளுநரின் செயல் கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களை அலட்சியப்படுத்தும் காரியம் - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 1:12 PM IST

Updated : Feb 15, 2024, 4:25 PM IST

MK Stalin speech: ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரையாற்றுவது என்பது சட்டமன்ற மரபு. அரசின் கொள்கை அறிக்கையாக அமைச்சரவை தயாரித்துத் தருவதை அப்படியே இந்த மன்றத்தில் வாசிக்க வேண்டியது ஆளுநரின் கடமை எனத் தெரிவித்துள்ளார்.

Chief Minister Stalin condemns Governor action
முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழும், தமிழ்நாடும், பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும்தான் எங்களை எந்நாளும் இயக்கிக் கொண்டிருக்கும் இயங்கு சக்திகள். ஐந்தும் நம்மை இயக்கிக் கொண்டிருப்பதால்தான், உற்சாகமாக உயர்ந்து கொண்டு இருக்கிறோம்.

இந்தியாவில் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை நாம் அடைய, இந்த உன்னத தலைவர்கள் போட்டுத் தந்த வழித்தடம்தான் அதற்குக் காரணம். திராவிட மாடல் வழித்தடத்தில் நாம் இயங்கிக் கொண்டிருப்பதால்தான், தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை, தடுக்கவும் முடியாது. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியாது.

ஒரு காலத்தில் ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்று நாமே முழங்கினோம். இன்று, ‘தெற்கு வளர்கிறது; வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது’ என்ற அளவுக்கு நாம் வளர்ந்துள்ளோம். இத்தகைய தகுதியும், பெருமையும் தமிழ்நாட்டிற்கு எதனால் சாத்தியமானது? திராவிட இயக்கத்தால்தான்.

ஆண்டின் தொடக்கத்தில் கடந்த 12-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் 2024 - 2025-ஆம் ஆண்டுக்கான பேரவை நடவடிக்கைகள் தொடங்கி இருக்க வேண்டும். ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரையாற்றுவது என்பது சட்டமன்ற மரபு. அரசின் கொள்கை அறிக்கையாக அமைச்சரவை தயாரித்துத் தருவதை அப்படியே இந்த மன்றத்தில் வாசிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. ஆனால், ஆளுநர் தனது அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இம்மாமன்றத்தையும் பயன்படுத்திக் கொண்டாரோ என்று கருதும் வகையில் நடந்து கொண்டார்.

இது, எங்களை அல்ல, நூற்றாண்டுப் பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தையே அவமானப்படுத்தும் செயல் அல்லவா? கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களை அலட்சியப்படுத்தும் காரியமல்லவா? மக்களாட்சி மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அரசியல் சட்டத்தை மீறி, தான் ஏற்றுக் கொண்ட பதவிப் பிரமாணத்துக்கு மாறாக செயல்படுவது அல்லவா?

எங்களைப் பொறுத்தவரை, இது போன்ற எத்தனையோ தடைகளை உடைத்து எழுந்து வந்தவர்கள். தடைக்கற்கள் உண்டென்றால், அதை உடைக்கும் தடந்தோள்கள் உண்டு என்பதை 75 ஆண்டுகளாக மெய்ப்பித்துக் காட்டி வரும் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவன் என்ற தகுதியோடு சொல்கிறேன், பாசிசத்தை - எதேச்சதிகாரத்தை - இந்தியாவில் நெஞ்சுயர்த்தி எதிர்கொண்டு இருக்கும் நாம், இது போன்ற சிறுபிள்ளை விளையாட்டுச் செயல்களைப் பார்த்து பயந்துவிட மாட்டோம்.

போற்றுவோர் போற்றட்டும்; புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன், எவர் வரினும் நில்லேன் அஞ்சேன் என்பதுதான் இவர்களுக்கு நான் சொல்லும் பதில்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் விரைவில் ஆய்வு" - சட்டப்பேரவையில் அமைச்சர் கீதாஜீவன் உறுதி!

Last Updated : Feb 15, 2024, 4:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details