தமிழ்நாடு

tamil nadu

இயந்திரக் கோளாறு காரணமாக அபுதாபி செல்லும் விமானம் ரத்து..பயணிகள் கடும் அவதி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 7:02 AM IST

flight cancelled: சென்னையில் இருந்து அபுதாபி செல்லும் ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்
சென்னை விமான நிலையம்

சென்னை:சென்னையில் இருந்து அபுதாபி செல்லும், ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் திடீரென நேற்று (பிப்.18) ரத்து செய்யப்பட்டது. விமானம் பறக்கத் தொடங்குவதற்கு முன்பாக இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டதால் 170-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை 5 மணிக்கு, அபுதாபிக்கு 164 பயணிகளுடன் புறப்படத் தயாராக இருந்தது. மேலும், இதில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 12 பேர் உட்பட, 176 பேர் அவர்களின் அனைத்து சோதனைகளை முடித்துவிட்டு, விமானத்தில் ஏறி அமர்ந்துள்ளனர்.

தொடர்ந்து, விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது. அப்போது, விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து உடனடியாக, விமானம் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. அதோடு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இதை அடுத்து விமான நிலையத்தின் இழுவை வாகனம் வரவழைக்கப்பட்டு அந்த பழுதடைந்த ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், புறப்பட்ட இடத்திற்கு இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. உடனடியாக, பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு காரணமாக விமானம் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை சரிசெய்யும் பணியில் விமான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறு சரி செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், விமானம் ரத்து செய்யப்படுவதாகவும், பயணிகள் அனைவரும் சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

விமானம் ரத்து செய்யப்பட்டதால், விமான நிறுவன அதிகாரிகளுடன் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு, விமான நிலைய அதிகாரிகள், விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறு சரி செய்யப்பட்டு, பிப்.19 (இன்று) அதிகாலையில் சென்னையிலிருந்து அபுதாபி கிளம்பும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, விமானம் பறக்கத் தொடங்குவதற்கு முன்பாக, விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டதன் காரணமாக, உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டதால், விபத்து தவிர்க்கப்பட்டு 164 பயணிகள், 12 விமான ஊழியர்கள் உட்பட 176 பேர் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details