தமிழ்நாடு

tamil nadu

சங்கரன்கோவில் வேன் ஓட்டுநர் உயிரிழப்பு விவகாரம்; சிபிசிஐடிக்கு மாற்றம்.. 5வது நாளாக தொடரும் போராட்டம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 3:15 PM IST

Vadakkuputhur Van driver death issue: சங்கரன்கோவில் பகுதியில் வேன் ஓட்டுநர் மர்மமான முறையில் இறந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஓட்டுநரின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் 5வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Vadakkuputhur Van driver death issue
சங்கரன்கோவிலில் வேன் டிரைவர் உயிரிழந்த சம்பவம்

சங்கரன்கோவில் பகுதியில் வேன் ஓட்டுநர் போலீசாரால் தாக்கப்பட்டு இறந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

தென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் முருகன் (37). ஓட்டுநரான இவர், மார்ச் 8ஆம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு, அச்சம்பட்டி கிராமத்தில் உள்ள பொதுமக்களை சாமி தரிசனத்துக்காக, சங்கரன்கோவிலுக்கு வேனில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இருப்பினும், விபத்து குறித்து தகவலறிந்து வந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை செய்துள்ளனர். அப்போது முருகன் மது அருந்திவிட்டு விபத்து ஏற்படுத்தியதாக கூறப்பட்ட நிலையில், போலீசார் முருகனைத் தாக்கிவிட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, முருகன் காவல் நிலையத்திற்குச் சென்றபோதே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும், முருகனை வேனில் ஏற்றிச் செல்லும் போதே, 3 போலீசார் தாக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, சம்பவம் அறிந்து வந்த முருகனின் உறவினர்கள், சங்கரன்கோவில் முன்பு குவிந்து, உடலை பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லவிடாமல் போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு கட்சியினரும் தங்களது கண்டன கோஷங்களை எழுப்பினர். குறிப்பாக, அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் குட்டியாப்பா ஆகியோர், முருகனின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து, இழப்பீடு தொகையையும் வழங்கியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, அடுத்த நாளே கம்யூனிஸ்ட் கட்சியினர், நாம் தமிழர் கட்சியினர் என அடுத்தடுத்து பல்வேறு கட்சியினர் தங்களின் கண்டனங்களை எழுப்பினர். தற்போது வடக்கு புதூரில், 5வது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சங்கரன்கோவில் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பகுதியில் உள்ள 48 கிராம மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஓட்டுநர் முருகன் இறப்பில் சந்தேகம் உள்ள நிலையில், அவரைத் தாக்கிய 3 போலீசார் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: சங்கரன்கோவில் பகுதியில் வேன் டிரைவர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! டிரைவரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்!

ABOUT THE AUTHOR

...view details