தமிழ்நாடு

tamil nadu

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு! - TTV DHINAKARAN

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 2:56 PM IST

TTV Dhinakaran: தேனியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக டிடிவி தினகரன் மற்றும் அமமுக நிர்வாகிகள் மீது தேனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

TTV dhinakaran
TTV dhinakaran

தேனி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு இறுதி நாளான நேற்று, தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளரும், அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் வேட்பு மனுவை தாக்கல் செய்ய பிற்பகல் 2 மணி அளவில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது, தேனி அன்னஞ்சி விளக்கிலிருந்து, ஆட்சியர் அலுவலகம் முன்பு 100 மீட்டர் வரை டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஊர்வலமாக வருவதற்கு போலீசார் அனுமதி அளித்திருந்தனர். ஆனால், தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி டிடிவி தினகரன் பிரச்சார வாகனத்திலும், அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் ஆட்சியர் அலுவலகத்தில் நுழைய முயன்றனர். இதனால் காவல்துறையினருக்கும், டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

பின்னர், அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, டிடிவி தினகரன் மற்றும் அவருடன் ஏராளமான ஆதரவாளர்கள் போலீசாரின் தடுப்புகளை மீறி உள்ளே சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அமமுக தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரன், அமமுக நிர்வாகி ராம் பிரசாத் மற்றும் ஏராளமான அமமுக கட்சி நிர்வாகிகள் மீது தேனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பம்பரம் சின்னத்தில் வாக்கு கேட்ட சி.வி.சண்முகம்! தேமுதிக வேட்பாளர் அதிர்ச்சி - Cv Shanmugam

ABOUT THE AUTHOR

...view details