தமிழ்நாடு

tamil nadu

தேனி மாரத்தான் போட்டி குளறுபடி; ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக திமுக நிர்வாகி மீது வழக்குப் பதிவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2024, 2:30 PM IST

Theni Marathon Issue: தேனியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கோரி போட்டியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட விவகாரத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் போட்டி ஏற்பாட்டளர்களான திமுக நிர்வாகி உள்பட மூவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தேனியில் மாரத்தான் விவகாரத்தில் திமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு
தேனியில் மாரத்தான் விவகாரத்தில் திமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு

தேனி:தனியார் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் தேனி மாவட்ட காவல்துறை இணைந்து, போதைப் பழக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாபெரும் மாரத்தான் போட்டி தேனி பங்களாமேடு பகுதியில் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி காலை நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்க கடந்த டிசம்பர் மாதம் முதலாகவே முன்பதிவு நடைபெற்று வந்தது.

அந்த வகையில், போட்டியில் பங்கேற்க ஒரு நபருக்கு 300 ரூபாய் நுழைவுக் கட்டணாமாக செலுத்த வேண்டும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்பார்கள் என கூறப்பட்டது.

அதனை அடுத்து, இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்பதற்காக தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான போட்டியாளர்கள் வருகை புரிந்தனர்.

மேலும், மூன்று பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டியில், முதல் 3 இடங்களைப் பிடிக்கும் போட்டியாளர்களுக்கு, 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை பரிசுத் தொகை வழங்கங்கப்படும் என்றும், ஒவ்வொரு பிரிவுகளில் முதல் 50 இடங்களைப் பிடிக்கும் போட்டியாளர்களுக்கு சைக்கிள் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, மாரத்தான் போட்டிக்கான ஏற்பாடுகளை சரியாக செய்யவில்லை என்றும், குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்து கொடுக்கவில்லை எனக் கூறி, போட்டியாளர்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிறுமி ஒருவர் மயக்கம் அடைந்ததாகவும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதிகூட ஏற்பாடு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

அதனையடுத்து, ஆத்திரம் அடைந்த இளைஞர்கள், பேனர்களைக் கிழித்தெறிந்து, தேனி - மதுரை இடையேயான பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாகக் கூறி, கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், இளைஞர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்ட தேனியைச் சேர்ந்த சூர்யா, வீரமணி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவா, தமிழ்செல்வன் என போராட்டத்தில் ஈடுபட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், போட்டியில் பங்கேற்ற ராமகிருஷ்ணன் என்பவர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஸ்டீபன் உள்ளிட்ட 3 பேர் மீது புகார் அளித்துள்ளார். அப்புகாரில், போட்டியில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் எனக் கூறி 30 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாகக் கூறப்பட்டு இருந்துள்ளது.

அப்புகார் அடிப்படையில், போட்டி ஏற்பாட்டாளர்கள் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், புகார் அளிக்கப்பட்ட ஸ்டீபன் என்பவர், திமுக கம்பம் தெற்கு இளைஞரணி பொறுப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தேனி மாவட்ட காவல்துறை நடத்திய மாரத்தானில் குளறுபடி? போராட்டத்தில் இறங்கிய போட்டியாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details