தமிழ்நாடு

tamil nadu

“வேட்பாளர்களின் மருத்துவச் சான்றிதழை கேட்க முடியாது” - தேர்தல் ஆணையம் பதில்! - CANDIDATE HEALTH CERTIFICATE

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 5:22 PM IST

CANDIDATE HEALTH CERTIFICATE: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மருத்துவ அறிக்கையை கேட்பது தனிமனித உரிமையை பாதிப்பதாக அமைந்துவிடும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

CANDIDATE HEALTH CERTIFICATE
CANDIDATE HEALTH CERTIFICATE

சென்னை:தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது, சொத்து விவரம், குற்ற வழக்குகள் பற்றிய தகவல்களை தாக்கல் செய்வதோடு, 30 நாட்களுக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை அறிக்கையுடன், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு அறிவுறுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, கோவையைச் சேர்ந்த எஸ்.வி.சுப்பையா என்பவர், 2016ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வேட்பாளர்களின் உடல் நிலை குறித்து பரிசோதனை அறிக்கை என்பது சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட அந்தரங்க விஷயம் என்பதால், அந்த விவரங்களை கேட்க முடியாது.

மேலும், இது சம்பந்தமாக விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், மருத்துவப் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டுமானால், அது குறித்து சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்” எனவும் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், “மக்கள் பிரதிநிதியின் உடல் நிலையை தெரிந்து கொள்ள வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது. மருத்துவக் காப்பீடு பெற மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளை அளிக்கும் நிலையில், வேட்பாளர்களுக்கு ஏன் வலியுறுத்தக் கூடாது” என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உடற்தகுதி சான்றை சமர்ப்பிக்க வேட்பாளரை வலியுறுத்த முடியுமா என்பது குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் சார்பில், வேட்பாளர்களிடம் மருத்துவ சான்றிதழ்கள் கேட்க முடியாது. அது தனிமனித உரிமையை பாதிப்பதாக அமைந்து விடும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: வெள்ளதுரை மேல்முறையீடு; மாநில மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு ரத்து! - Assistant Commissioner Velladurai

ABOUT THE AUTHOR

...view details