தமிழ்நாடு

tamil nadu

எதற்காக நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிராகப் பிரச்சாரம்? விளக்குகிறார் விவசாயச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உறுதி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 10, 2024, 5:09 PM IST

Farmers union leader Ayyakannu: நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிராக விவசாயிகளைத் திரட்டி பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதாக விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

திருச்சி
திருச்சி

நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக பிரச்சாரம்; விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு உறுதி!

திருச்சி: தேசியத் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள விவசாயச் சங்க அலுவலகத்தில் இன்று (மார்ச் 10) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்கக் கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்துக் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரியும், 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5000/- வழங்கக் கோரியும், கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றக் கோரியும், மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணைகட்டக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக ஒவ்வொரு மாதமும் தண்ணீர் திறக்கக் கோரியும், பாமாயில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, உள்நாட்டில் உற்பத்தியாகும் எண்ணெய் வித்துக்களைக் கொள்முதல் செய்ய வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயச் சங்க நிர்வாகிகள் உறுப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து தேசியத் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, "மத்திய அரசு விவசாயிகளுக்குக் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றக்கோரி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீசி கொடூரத் தாக்குதலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதனால் மோடி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்தும் விவசாயிகள் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காத மோடியைக் கண்டித்தும் இந்தியா முழுவதும் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் காவேரி ஆற்றுக் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கூடாது எனவும் கோதாவரி காவேரி ஆற்றை இணைத்து தமிழக விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:சீர்காழி சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details