தமிழ்நாடு

tamil nadu

நெல்லை வரும் பிரதமர் மோடி நெல்லையப்பர் ஆவரா? - இந்து முன்னணியினர் உள்ளிட்டோர் கண்டனம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 7:38 AM IST

PM Modi: நெல்லையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் பாஜகவினர், 'எங்கள் நெல்லையப்பர் சாமியே வருக.. வெல்க.. வாழ்க' என்ற வாசகத்துடன் ஒட்டியுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

PM Modi Poster Controversy in Tamil Nadu
நெல்லையில் பிரதமர் மோடியை சிவனுக்கு இணையாக சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டர்

நெல்லையில் பிரதமர் மோடியை சிவனுக்கு இணையாக சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டருக்கு கண்டனம்

நெல்லை: திருநெல்வேலிக்கு முதல்முறையாக வர உள்ள பிரதமர் மோடியை சிவனுக்கு இணையாக சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டருக்கு இந்து முன்னணி, காங்கிரஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாளையங்கோட்டையில் பாஜக சார்பில் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேச உள்ளார். முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு பிரதமர் மோடி, நெல்லை பொதுக்கூட்டத்திற்கு வருகிறார்.

குறிப்பாக, முதல் முறையாகப் பிரதமர் மோடி நெல்லை மாவட்டத்திற்கு வர இருப்பதால் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடிக்க பாஜகவினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மேலும் பிரதமரை வரவேற்று மாநகரம் முழுவதும் பாஜகவினர் ஆங்காங்கே வரவேற்பு பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில், நெல்லை தெற்கு மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு மாவட்டத் தலைவர் ஜெயதுரை பாண்டியன் சார்பில் பிரதமர் மோடியை சிவனுக்கு இணையாக சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மோடியை, சிவனுக்கு இணையாக சித்தரித்த வசனங்களை அச்சிட்டிருப்பது இந்து ஆர்வலர்கள் மற்றும் சிவபக்தர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, தென் தமிழ்நாட்டில் நெல்லையில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில், ஜெயதுரை பாண்டியன் ஒட்டியுள்ள போஸ்டரில் 'எங்கள் நெல்லையப்பர் சாமியே வருக.. வெல்க.. வாழ்க' எனக் குறிப்பிட்டுள்ளார். நெல்லையப்பர் கோயிலும், நெல்லையப்பர் சாமியும் நெல்லையின் முக்கிய ஆன்மீக அடையாளமாகக் கருதப்படுகிறது.

எனவே நெல்லையப்பர் கடவுளின் பெயரைப் பயன்படுத்தி பிரதமருக்கு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு சிவபக்தனாக தனது மனமும் புண்பட்டிருப்பதாக கூறியுள்ளார். எனவே, காவல்துறையினர் உடனடியாக இந்த போஸ்டரை அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில், பாஜகவின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் இந்து முன்னணியும் இந்த போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:"2026 சட்டமன்றத் தேர்தல் தான் எங்கள் இலக்கு" - சமக தலைவர் சரத்குமார்

ABOUT THE AUTHOR

...view details