தமிழ்நாடு

tamil nadu

ஆதி கருவண்ணராயர் கோயில் திருவிழா முன்னேற்பாடு கூட்டத்தில் வாக்குவாதம் - கூட்டம் ஒத்திவைப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 12:39 PM IST

Karuvannarayar Temple Festival Issue: சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள ஆதி கருவண்ணராயர் கோயில் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற விழா முன்னேற்பாடுகள் குறித்த அமைதி பேச்சுவார்த்தையில், கோயில் நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆதி கருவண்ணராயர் கோயில் திருவிழா முன்னேற்பாடு கூட்டத்தில் வாக்குவாதம்
ஆதி கருவண்ணராயர் கோயில் திருவிழா முன்னேற்பாடு கூட்டத்தில் வாக்குவாதம்

ஆதி கருவண்ணராயர் கோயில் திருவிழா முன்னேற்பாடு கூட்டத்தில் வாக்குவாதம்

ஈரோடு:ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்தில் தெங்குமரஹாடா கிராமத்திற்குச் செல்லும் வழியில், அடர்ந்த வனப்பகுதியில் கெஜலெட்டி என்ற இடத்தில் பிரசித்தி பெற்ற ஆதி கருவண்ணராயர் பொம்ம தேவி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகம் பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு வரும் பிப்.17ஆம் தேதி மாசி பொங்கல் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, 24, 25 மற்றும் 26 என 3 நாள்கள் நடைபெறும் பொங்கல் விழாவில் ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 700க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.

அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள இக்கோயிலுக்கு, உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பக்தர்கள் அனுமதிப்பது குறித்து சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி, டி.எஸ்.பி சரவணன் ஆகியோர் முன்னிலையில் கடந்த புதன்கிழமை (பிப்.14) அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் வனத்துறை, மின்வாரியம், அறநிலையத்துறை அதிகாரிகளும், கோயில் திருப்பணிக் குழு சார்பில் அறங்காவலர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பொங்கல் விழா நடைபெறும் 3 நாள்கள் மட்டுமே கோயிலுக்கு தினந்தோறும் 100 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என அமைதி பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு கோயில் தரப்பில், தமிழகம் முழுவதிலுமிருந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வரும் நிலையில், பூச்சாட்டு நாளில் இருந்து தொடர்ந்து 8 நாள்கள் அனுமதி கேட்டிருந்தனர். நீதிமன்ற விதிமுறைகளின்படி அனுமதியில்லை என அதிகாரிகள் தெரிவித்ததால், 5 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இப்பிரச்னை குறித்து உயர் நீநிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆதி கருவண்ணராயர் பொம்ம தேவி கோயில் மாசி மக பொங்கல் விழா முன்னேற்பாடு குறித்து கோயில் மற்றும் அதிகாரிகள் தரப்பில் நடைபெற்ற கூட்டத்தில் இரு தரப்பினரிடையே கூச்சல், வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:நெருங்கும் கோடை காலம்.. ஏற்காடு - கருமந்துறை பகுதிகளில் காட்டுத்தீ விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை!

ABOUT THE AUTHOR

...view details