தமிழ்நாடு

tamil nadu

கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வு முழுமையாக நடைபெறுமா?.. நிதியிருந்தும் நிலையில் உள்ளது ஏன்? - Keezhadi Excavation

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 3:00 PM IST

Keezhadi Excavation: தமிழ்நாடு தொல்லியல் துறையால் நடத்தப்பட்டு வரும் கீழடி உள்ளிட்ட தமிழ்நாட்டிலுள்ள 8 இடங்களில், இந்தாண்டு முழுமையாக அகழாய்வு நடத்துவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Keezhadi Excavation
Keezhadi Excavation

சிவகங்கை: தமிழர்களின் பண்டைய பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் விதமாகவும், உலகமே பார்த்து வியக்கும் மிகப்பெரும் தொன்மை சிறப்பிற்குரிய இடமாகவும் மாறியுள்ளது, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி. பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த இப்பகுதி, இந்திய தொல்லியல் துறையால் அடையாளம் காணப்பட்டு, கடந்த 2015ஆம் ஆண்டு தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவால் கீழடி அகழ்வாராய்ச்சி துவங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடி தொல்லியல் மேடு, தற்போது வரை 9 கட்ட அகழாய்வுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அதில், தற்போது வரை பல அரிய வகை பொருட்கள், ஆபரணங்கள், மண்டை ஓடுகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்திய தொல்லியல் துறையிடம் உள்ள 5 ஆயிரத்து 765 அகழாய்வுப் பொருட்களையும் மத்திய அரசு, தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என வழக்கறிஞர் கனிமொழி மதி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

தற்போது, அவ்வழக்கு தொடர்பாக பிப்ரவரி மாதம், மத்திய அரசு 9 மாதங்களில் கீழடியில் நடத்திய 2 கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை வெளியிடவுள்ளது எனவும், அதன் பின்பு, இந்தியத் தொல்லியல் துறையிடம் உள்ள 5 ஆயிரத்து 765 அகழாய்வுப் பொருட்களையும் மத்திய அரசு, தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், அதனை மாநில அரசு பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதுரைக்கிளை உத்தரவிட்டது.

புதிய சிக்கல் என்ன? அதாவது, தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை மாவட்டம் கீழடி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, தென்காசி மாவட்டம் திருமலாபுரம், திருப்பூர் மாவட்டம் கொங்கல் நகரம், கடலூர் மாவட்டம் மருங்கூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானுார் ஆகிய 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி பணியைத் துவக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிதியாண்டில் அதற்கான நிதியையும், தமிழ்நாடு தொல்லியல் துறை பெற்றுள்ளது. ஆனால், இதுவரை மத்திய அரசு அகழாய்வுப் பணி நடத்த அனுமதி தரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த அனுமதியை, கடந்த டிசம்பர் மாதம் அல்லது 2024 ஜனவரியிலாவது வழங்கியிருக்க வேண்டும். தற்போது அகழாய்விற்காக அனுமதி கிடைக்காததால், தமிழ்நாடு பட்ஜெட்டில் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இன்னும் ஒரு வாரத்திற்குள் அனுமதி கிடைத்தால்தான், இந்த நிதியைப் பயன்படுத்தி அகழாய்வுப் பணியைத் துவக்க முடியும். இல்லையெனில் இந்த நிதியாண்டு இறுதியில் நிதியை ஒப்படைத்து, அதனைத் தொடர்ந்து ஏப்ரலுக்குப் பிறகுதான் நிதியை திருப்பிப் பெற முடியும். ஆனால், அதிலும் ஒரு சிறிய சிக்கல் உள்ளது. அதன்பிறகு பணி துவக்கப்பட்டால், 4 மாதங்களில் மழைக்காலம் துவங்கிவிடும். ஆகையால், தற்போது அகழாய்வுப் பணிகளை முழுமையாக முடிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரிலும் நடந்த அகழ்வாராய்ச்சிப் பணியை, இந்த ஆண்டும் துவங்க அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை மத்திய அரசு அனுமதி வழங்காததால், ஆதிச்சநல்லூரிலும் பணிகள் துவங்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "என்ட சேட்டன் சேச்சிமாரே" - கேரளாவில் மீண்டும் மாஸ் காட்டிய விஜய்.. வைரலாகும் செஃல்பி வீடியோ! - Actor Vijay

ABOUT THE AUTHOR

...view details