தமிழ்நாடு

tamil nadu

காமராஜரை கொலை செய்ய முயன்ற ஆர்.எஸ்.எஸ்..சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பேச்சு.. வழக்கறிஞர் குற்றாலநாதன் திட்டவட்டமாக மறுப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 4:02 PM IST

Tamil Nadu Legislative Assembly Speaker: நெல்லை பொருநை இலக்கிய திருவிழாவில் கலந்து கொண்ட அப்பாவு காமராஜரை ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்யப் பார்த்தார்கள் எனப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tamil Nadu Legislative Assembly Speaker
அப்பாவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத்துறை சார்பில் நெல்லை பொருநை இலக்கியத் திருவிழா இன்று(ஜன.30) தொடங்கியது. பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இலக்கியத் திருவிழாவைத் தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னிலன் உட்பட பல எழுத்தாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, "இந்தியாவிலேயே அதிக சாகித்திய அகாதமி விருது பெற்ற பகுதியாக நெல்லை சீமை உள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கலை, இலக்கியம், பண்பாடு மீது மிகப்பெரிய பற்று கொண்டிருந்தார். பெரியார், அண்ணா, கருணாநிதி எடுத்த முயற்சியால் தான் தமிழ்மொழி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது, இல்லாவிட்டால் பிறமொழி நம்மை ஆண்டு கொண்டிருக்கும். வெளிநாட்டில் ஆட்சி மொழியாக இருக்கும் ஒரே மொழி தமிழ்மொழி தான். சிங்கப்பூர், மலேசியா உள்பட ஏழு நாடுகளில் ஆட்சி மொழியாகத் தமிழ் மொழி இருக்கிறது. இவ்வளவு சிறப்புப் பெற்ற தமிழ்மொழி இந்திய அளவில் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.

உலகளவில் ஆட்சி மொழியாக இருக்க வேண்டியது தமிழ் மொழி. இந்தியாவில் ஆட்சி மொழியாகத் தமிழ்மொழி இருக்க வேண்டும் என்ற உரிமைக் குரலைத் தொடர்ந்து நாம் கொடுக்க வேண்டும். இந்தியாவிலேயே தமிழ்மொழிக்குத் தான் முதன் முதலில் செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது. மிகக் குறைந்த பேச்சு வழக்கில் உள்ள சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு 2ஆயிரம் கோடி ரூபாயை வளர்ச்சி நிதியாகக் கொடுக்கிறது. ஆனால் 10 கோடி பேர் பேசும் தமிழ்மொழிக்கு வெறும் 40 கோடி அல்லது 50 கோடி ரூபாய் தான் தருகின்றனர்.

3ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாகரீகம் தோன்றியுள்ளது என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இல்லாமல் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்ந்தனர். சாதியால், மதத்தால் யாரும் நம்மைப் பிரிக்க முடியாது. திட்டமிட்டே சிலர் நம்மைப் பிரிக்கப் பார்க்கிறார்கள். ஒரு முறை ஆர்.எஸ்.எஸ் இயக்கத் தலைவர் டெல்லியில் பசு வதை தடைச் சட்டம் கொண்டு வருவது தொடர்பாகப் பேரணி நடத்த வேண்டும் எனக் காமராஜரிடம் கேட்டுள்ளார். ஆனால் காமராஜர் அதைத் தடுத்து பேரணி நடத்த வேண்டாம் என்றார்.

அதனால் அவர் வாழ்ந்த வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி அவரைக் கொலை செய்யப் பார்த்தார்கள். அவர் தப்பித்து விட்டார். நாங்கள் கிராமந்தோறும் பள்ளிகள் கட்டுவோம் என்கிறோம். நீங்கள் கிராமந்தோறும் கோயில் கட்டுவோம் என்கிறீர்கள் என்று காமராஜர் சொன்னார். கல்விதான் நம்மை ஒற்றுமைப்படுத்துகிறது" என்று பேசினார். நெல்லை பொருநை இலக்கியத் திருவிழாவில் சபாநாயகர் திடீரென ஆர்.எஸ்.எஸ்சை(RSS) பற்றிப் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து இந்து முன்னணியின் மாநிலச் செயலாளரும் வழக்கறிஞரான குற்றாலநாதன் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், "அது போன்ற ஒரு வரலாறு இல்லை. தொடர்ச்சியாக சபாநாயகர் அப்பாவு வரலாற்றுக்கு புறமான தகவல்களை பேசி வருகிறார். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், இந்திராகாந்தி கொண்டு வந்த எமர்ஜென்சி(EMERGENCY) சட்டத்தால் தான் காமராஜர் மறைந்தார். எனவே காமராஜர் மறைவுக்கு காங்கிரஸ் தான் காரணம். வரலாற்றில் இல்லாதவற்றை சபாநாயகர் பேசி வருகிறார்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:"விரைவில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படும்" -ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி!

ABOUT THE AUTHOR

...view details