தமிழ்நாடு

tamil nadu

"மத்திய அரசின் நலத்திட்டங்களிலும் கமிஷன் கேட்கும் கட்சி திமுக" - அண்ணாமலை குற்றம்சாட்டு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 10:38 PM IST

Bjp Annamalai Statement: மத்திய அரசு மக்களுக்காக இலவசமாகச் செயல்படுத்தும் நலத்திட்டங்களிலும் கமிஷன் கேட்கும் கட்சி திமுக என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்குப் பதில் தரும் விதமாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருப்பதாகவும், தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிவதாகவும், நகைச்சுவை செய்திருக்கிறார்.

பிரதமர் ஒவ்வொரு முறை தமிழகத்துக்கு வரும்போதும், பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவு செய்யப்பட்ட திட்டங்களைத் தொடங்கி வைக்கவும் தானே வருகிறார் தவிர, முதலீடு ஈர்க்கிறோம் என்ற பெயரில் குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா செல்ல அல்ல என்பதை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

சில நாட்களுக்கு முன்பாக ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தலில், திமுகவின் முதல் குடும்பம் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவருக்கும் நெருக்கமான ஜாபர் சாதிக் என்பவர் சிக்கிக்கொண்ட விவகாரம் சர்வதேச அளவில் இன்று விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை கோட்டை விட்ட போதைப் பொருள் கடத்தல் விவகாரம், திமுகவுக்குத் தலைவலியாகியிருக்கிறது. அதனை மடைமாற்ற, அறிக்கை என்ற பெயரில் சிரிப்பு காட்டியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

பிரதமர் நாடு முழுவதும் அறிவித்த திட்டங்கள் பலவற்றை, தங்கள் சுய நலனுக்காக, தங்கள் கட்சியினர் வருமானத்துக்காகத் தமிழகத்துக்குள் அனுமதிக்காமல், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடிக் கொண்டிருக்கின்றன திராவிடக் கட்சிகள்.

மத்திய அரசின் நவோதயா பள்ளிகளையும், PM Shri பள்ளிகளையும் தமிழகத்துக்குள் அனுமதிக்காமல் இருப்பதற்கு திமுக கூறும் காரணம் மும்மொழிக் கொள்கை. திமுகவினரின் உண்மையான நோக்கம், பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி என்பதைத் தவிர, மாணவர்களின் நலன் அல்ல.

கடந்த 2022 மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, திமுக அரசு நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான மூலப்பொருள்கள் கொள்முதல் செய்யத் தமிழக அரசு சரிவர ஏற்பாடுகள் செய்யாமல் இருப்பதால், தமிழகத்தில் நெடுஞ்சாலைப் பணிகள் தாமதமாகின்றன என்று பாராளுமன்றத்திலேயே குற்றம் சாட்டினார். இதற்கு முதல்வரிடம் பதில் ஏதும் இருக்கிறதா?

தமிழகத்தில் பட்டியல் சமூக மக்கள் நல்வாழ்வுக்காக மட்டுமே ஒவ்வொரு வருடமும் ஒதுக்கப்படும் நிதியை, செலவே செய்யாமல் சுமார் 10,000 கோடி ரூபாயை, திமுக அரசு திருப்பி அனுப்பியது முதலமைச்சருக்கு நினைவில் இருக்கிறதா? பட்டியல் சமூக மாணவர்களுக்கான விடுதிகள், பள்ளிக் கட்டிடங்கள் உள்ளிட்டவை, அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கும்போது, அதற்குச் செலவிடாமல் 10,000 கோடி ரூபாய் நிதியைத் திருப்பி அனுப்பியதன் மூலம், முதலமைச்சர் பட்டியல் சமூக மக்களுக்குச் சொல்லும் செய்தி என்ன?.

மத்திய அரசு மக்களுக்காக இலவசமாகச் செயல்படுத்தும் நலத்திட்டங்களிலும் கமிஷன் கேட்கும் கட்சி தானே முதலமைச்சர் ஸ்டாலின் கட்சி. மத்திய அரசு தமிழகத்துக்கு, தமிழக மக்களுக்கு வழங்கும் இத்தனை நலத்திட்டங்களிலும் முறைகேடு செய்து, தடை செய்து, மடைமாற்றி, தாமதப்படுத்தி விட்டு, எந்தத் தைரியத்தில் மத்திய அரசுத் திட்டங்களின் பட்டியல் கேட்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்பது வியப்பளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:5,765 கீழடி அகழாய்வுப் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details