தமிழ்நாடு

tamil nadu

"தடுப்பை ஏறி குதித்து ராகுல் காந்தி ஸ்வீட் வாங்கலாம்.. ஆனால்?" - அண்ணாமலை கொந்தளிப்பு! - lok sabha election 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 8:23 PM IST

Annamalai Attacks Rahul Gandhi: இனிப்பு வாங்குவதற்காக ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டி சென்றது அப்பட்டமான போக்குவரத்து விதி மீறல். அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை
கோவை

"தடுப்பை ஏறி குதித்து ராகுல் காந்தி ஸ்வீட் வாங்கலாம்.. ஆனால்?" - அண்ணாமலை கொந்தளிப்பு!

கோயம்புத்தூர்: கோவை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்த நிலையில், வேட்பாளர் அண்ணாமலை இன்று (ஏப்.16) சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாப்பம்பட்டி, அப்பநாயக்கன்பட்டி, சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த பிரச்சாரத்தின் உணவு இடைவெளியின் போது, வேட்பாளர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "ஆனைமலை - நல்லாறு திட்டத்திற்குப் பெரிய எதிர்ப்பு இல்லை. 1958ல் போட்ட 2 ஒப்பந்தம். நம் ஒப்பந்தத்திற்குப் பிறகு கேரள அரசு அவர்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றி தண்ணீரைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

நாமும் ஒப்பந்தத்தை நிறைவேற்றி தண்ணீரைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் தவறி விட்டோம். இது கிட்ட தட்ட 10000 கோடி திட்டம். எனவே ஜூன் 4க்கு பிறகு மோடியைச் சந்தித்து, பேசி உறுதியாகச் செயல்படுத்தி ஆக வேண்டும். சூலூர் சுற்றுவட்டார கிராமங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் வாழ முடியாது. நீர்நிலை வற்றி உள்ளது. நிலத்தடி நீர் 1000 அடிக்கு கீழ் உள்ளது. அதனால், இதற்கு ஆனைமலை - நல்லாறு திட்டம் மட்டுமே தீர்வு" என்றார்.

தொடர்ந்து, ராகுல் காந்தி கோவையில் சாலை தடுப்பைத் தாண்டி சென்றது குறித்த கேள்விக்கு, "ராகுல்காந்தி சாலை தடுப்பைத் தாண்டி சென்றது என்பது போக்குவரத்து விதிமீறல். அதுவே அண்ணாமலை என்றால் திமுகவும் கோவை காவல்துறை கிளம்பி வருவார்கள்.

மூத்த அரசியல் தலைவர் ராகுல்காந்தியின் செயல் இளைஞர்களுக்கு என்ன கருத்தைச் சொல்கிறது. இதை திமுகவினரும் ஸ்டாலினும் கொண்டாடி வருகின்றனர். அண்ணாமலைக்கு ஒரு நியாயம், ராகுல்காந்தி ஒரு நியாயம். ராகுல்காந்தி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை நிலைநாட்டும் போது தான் சட்டத்தின் மீது மரியாதை வரும்" என்றார்.

ராகுல் காந்தி தமிழகத்திற்கு வந்து சென்ற பின்பு பாஜகவிற்கு பயம் வந்துள்ளதாகக் கூறுகின்றனர் என்ற கேள்விக்கு, "ஸ்டாலினுக்கு தான் பயம் வந்துள்ளது. ராகுல்காந்தி வயநாட்டிற்குச் செல்லும்போது கம்யூனிஸ்ட் எதிர்த்து உள்ளனர். எல்லை தாண்டி இங்கு வந்தால் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர் என்கின்றனர். இது தான் இந்தியா கூட்டணியின் நிலை.

ஸ்டாலின் அவர் மீது நம்பிக்கை இல்லாததால், ராகுல்காந்தி அழைத்து வருகிறார். அண்ணாமலையைத் தோற்கடிக்க திமுகவே இங்கு நின்றது. தோற்கடிக்க முடியாது என்பதால் ராகுல்காந்தியை அழைத்து வந்துள்ளனர். கோவை மக்களின் அன்பு மோடிக்கு உள்ளது. அதனால் 60% வாக்குகள் கிடைக்கும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக தொண்டர்கள் வெளியே வந்து அனைவரும் பாஜகவில் இணைந்து மோடியின் பக்கம் வந்துள்ளனர். சூலூர், பல்லடம் பகுதிகளில் அதிமுகவை சேர்ந்த முக்கியமானவர்கள் பாஜக பக்கம் வந்துள்ளனர். களத்தில் வேலை செய்கின்றனர். அதிமுகவின் நிலையை அவர்கள் ஏசியிலிருந்து வெளியே வந்து எட்டிப் பார்க்க வேண்டும்.

தேசிய தேர்தல், பிரதமருக்கான தேர்தல், பிரதமர் வேட்பாளர் இல்லாமல் அவர்கள் இத்தனை நாட்களைக் கடத்தி வந்துள்ளனர். நாளை பிரச்சாரம் முடிய உள்ளது. களத்தில் பார்த்தால் அதிமுக வாக்கு வெளியே வந்துவிட்டது. அதிமுக மாய உலகத்தில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக எடப்பாடி, மூத்த தலைவர்கள் அனைவரும் மாய உலகில் வாழ்ந்து வருகின்றனர். பாஜகவின் பலத்தை அனைத்து இடங்களிலும் பார்க்கலாம்.

கூட்டணி தலைவர்கள் அவர்கள் வேட்பாளர்கள் போல் களத்தில் உள்ளனர். கட்சி முக்கியம் என்றாலும், பாஜகவின் வெற்றியை நடுநிலை வாக்குகள் தீர்மானிக்கிறது. ஜூன் 4 கள நிலவரம் பாருங்கள், பாஜக மிகப்பெரிய வெற்றிபெறும்.

தமிழகத்தில் 2 இலக்கில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 10ஐ தாண்டி, ஒவ்வொரு நாளும் எழுச்சியால் 39 நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். நாங்கள் கட்சியில், கூட்டணியில் 25 இலக்கு வைத்துள்ளோம். கோவையில் பாஜக நம்பிக்கையாக வெல்லும் என சொல்வது போல் தமிழக அளவிலும் சாதகமாகச் சூழ்நிலை வரும்.

சிங்காநல்லூர், பீளமேடு ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும். கோவை மத்திய ரயில் நிலையம் உலகம் தரம் வாய்ந்த ரயில் நிலையமாகத் தரம் உயர்த்தப்படும். வாரணாசி போல் கோவைக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்படும்" எனப் பேசினார்.

இதையும் படிங்க:ஈரோட்டில் தங்கும் விடுதியில் 3 வயதுக் குழந்தையைக் கொன்று.. தாய் தற்கொலை! - பின்னணி என்ன? - Mother Commits Suicide In Erode

ABOUT THE AUTHOR

...view details