தமிழ்நாடு

tamil nadu

ஆக்டராக இருந்தாலும் டாக்டராக இருந்தாலும் அரசியல் கட்சி தொடங்கலாம் - அன்புமணி ராமதாஸ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 4:21 PM IST

Anbumani Ramadoss about Vijay: நடிகர் விஜய் மக்களை சார்ந்து என்னென்ன திட்டங்கள் கொண்டு வர முயற்சி செய்கிறார் என்பதை அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் பேட்டி
அன்புமணி ராமதாஸ் பேட்டி

சேலம்:சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இன்று (பிப்.03) கலந்து கொண்டார். முன்னதாக, அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் கட்சி தொடங்கியுள்ளது குறித்து பாமகவின் கருத்து என்ன என்கிற கேள்விக்கு பதிலளித்தவர், “யார் வேண்டுமானாலும் கட்சியைத் தொடங்கலாம். ஆக்டராக இருந்தாலும் டாக்டராக இருந்தாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். எங்கள் கட்சி தொடங்கியது சமூக நீதிக்காகத்தான். இதுவரை பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி, 6 வகையான இட ஒதுக்கீடுகளை பெற்றிருக்கிறோம்.

மதுவிலக்கை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். பொது இடங்களில் புகை பிடிக்கக்கூடாது என பாட்டாளி மக்கள் கட்சி எச்சரித்தது. சேலம் ரயில்வே கோட்டம், சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி போன்ற பல புரட்சிகளையும், சாதனைகளையும் கொண்டு வந்தது பாட்டாளி மக்கள் கட்சி. இதுதான் ஒரு கட்சியின் உண்மையான வேலை.

யாராவது கட்சி தொடங்கினால், இது போன்ற சாதனைகளை செய்ய வேண்டும். அவர் கட்சி தொடங்குவதற்கு எங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மக்களை சார்ந்து என்னென்ன திட்டங்கள் கொண்டு வர விஜய் முயற்சி செய்கிறார் என்பதை அவர் அறிவிக்க வேண்டும்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “தமிழகத்தில் அரிசி விலை 6 ரூபாய் உயர்ந்திருக்கிறது. மேலும் 12 ரூபாய் உயரும் என கூறுகிறார்கள். இதனை தடுத்து விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் வைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியில் நீர் வராத காரணத்தால், டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் குறுவை சாகுபடி சேதம் ஆகி இருக்கிறது.

இந்த நிலையில், இரண்டு டிஎம்சி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆந்திராவில் அதை தொடங்கிவிட்டனர். தெலங்கானாவில் விரைவில் அறிவிப்பு என தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், தமிழக அரசு இது பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதது கண்டிக்கத்தக்கது.

அப்படி என்றால் சமூகநீதி பற்றி பேச திமுகவிற்கு தகுதியில்லை என்று பொருள். தமிழக அரசு உடனடியாக சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இன்று அண்ணா நினைவு நாள். படிப்படியாக மதுவிலக்கு இனியாவது கொண்டு வருவார்களா? இளைஞர்கள் மது குடிக்காமல் இருக்க முடியாத நிலையில் உள்ளனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?

கல்வி, சுகாதாரம் மாநிலப் பட்டியலில் இருந்திருந்தால் நீட் பிரச்சினை வந்திருக்காது. சென்னை, தூத்துக்குடி, நாகப்பட்டினம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் மத்திய அரசால் நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே, உடனே நிதி ஒதுக்க வேண்டும். வரும் பாராளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு தருவோம். செந்தில் பாலாஜி எந்த காரணத்திற்காக இவ்வளவு நாளாக அமைச்சராக வைத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை” என்றார்.

இதையும் படிங்க:“உதயநிதி மூலம் எனக்கு கிடைத்த அருமையான அண்ணன்” - விஜயின் அரசியல் வருகை குறித்து அன்பில் மகேஷ்!

ABOUT THE AUTHOR

...view details