தமிழ்நாடு

tamil nadu

தேர்தல் கருத்துக்கணிப்பு என்ற பெயர் திமுக மக்களை ஏமாற்றுகிறது: தஞ்சாவூரில் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 10:09 AM IST

TTV Dhinakaran: தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில் மக்களை எப்படி ஏமாற்றினார்களோ, அதே போல இன்றைக்கு தேர்தல் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதற்கு திமுகவினர் குறுக்கு வழியில் இறங்கிவிட்டார்கள் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தேர்தல் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் திமுக மக்களை குறுக்கு வழியில் ஏமாற்றுகிறது
தேர்தல் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் திமுக மக்களை குறுக்கு வழியில் ஏமாற்றுகிறது

தேர்தல் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் திமுக மக்களை குறுக்கு வழியில் ஏமாற்றுகிறது - டிடிவி தினகரன்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் திலகர் திடலில் அமமுக சார்பில் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் (பிப்.11) நடைபெற்றது. இதில் பேசிய டிடிவி தினகரன், "துரோகத்தை தவிர என்ன தெரியும், மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்க தெரியும், அதை வைத்து ஆட்டம் போடுகிறீர்கள். உங்கள் ஆட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் முடிவுக்கு கொண்டு வருகிற முதல் தேர்தலாக இந்த நாடாளுமன்றத் தேர்தல் இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமியை குற்றம்சாட்டினார்.

மேலும், ஈபிஎஸ் செய்த ஊழல்களால், முறைகேடுகளால் தவறான நிர்வாகத்தால் மக்கள் கொதிப்படைந்து, திமுக திருந்தியிருக்கும் என்று நம்பி திமுகவிற்கு வாக்களித்தனர். ஆனால், திமுக ஆட்சியில் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியினர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. தேர்தல் நிதி வாங்கியதோடு சரி, போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னை, பழைய ஓய்வூதிய திட்டம் ஆகிய எதையும் இந்த அரசாங்கம் அமல்படுத்தவில்லை. கம்யூனிஸ்ட்கள் எதற்கெடுத்தாலும் தெருவில் இறங்கி போராடினார்கள், இன்றைக்கு சத்தமே இல்லை எனக் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக திருந்தவே திருந்தாது என்பதில் மக்கள் முடிவுக்கு வந்துவிட்டார்கள். தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில் மக்களை எப்படி ஏமாற்றினார்களோ, அதேபோல இன்றைக்கு தேர்தல் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதற்கு திமுகவின் பின்னணியில் முயற்சி நடைபெற்று வருகிறது. இவர்கள் கூட்டணி ஆளும் மாநிலங்களிலும் சரி, அவர்கள் அமைத்த இந்தியா கூட்டணியும் (INDIA Alliance) இன்றைக்கு சிதறிப் போய்விட்டது. அதனால், அவர்கள் இப்படி குறுக்கு வழியில் இறங்கிவிட்டனர்.

டெல்டா பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக அரசின் தவறான நடவடிக்கையான அணை கட்டுவதை தடுத்து நிறுத்த முடியாமல் தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளார். வழக்கறிஞராக பணியாற்றிய திமுக எம்பி ஆ.ராசா எம்ஜிஆரை வாய் கூசும் வகையில் பேசுகிறார். அவருக்கு அவ்வாறு பேச தகுதி உள்ளதா என்றும் அதேபோல், எம்ஜிஆர் கொண்டு வந்த சட்ட திட்டங்களை மாற்றி அதிமுகவை கபளீகரம் செய்துள்ள எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

ஆ.ராசா தான் படித்த படிப்பிற்கும், தான் வகித்த பதவிக்கும் மரியாதை கொடுக்கின்ற விதமாக வருங்காலத்தில் மறைந்த தலைவர்களைப் பற்றி பேசினால் அவருக்கு நல்லது. இல்லையெனில், அலைக்கற்றை ஊழலில் அடுத்தக்கட்டம் உள்ளது; உறுதியாக அதற்கான பலனை அனுபவிப்பார்.

தமிழ்நாடு அரசியலில் மக்களை திசைத்திருப்பி ஏமாற்றி, ஊழல் முறைகேடுகளை தொடர்ந்து செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன" என்று கூறியுள்ளார். இக்கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை; தொகுப்பூதிய கணினி ஆபரேட்டர் நியமன ரத்துக்கு இடைக்கால தடை!

ABOUT THE AUTHOR

...view details