தமிழ்நாடு

tamil nadu

சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா? - எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன? - savukku shankar assault allegation

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 7, 2024, 1:56 PM IST

Edappadi Palaniswami: கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக கூறும் அவரது வழக்கறிஞரின் குற்றச்சாட்டு குறித்து தமிழக அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் சவுக்கு சங்கர் தெரிவித்த கருத்துக்கள் தவறானதாக இருந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் வேண்டும் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

Photo of Edappadi Palaniswami and Savukku shankar
எடப்பாடி பழனிசாமி, சவுக்கு சங்கர் (Credits: ETV Bharat Tamilnadu (File Image))

கோவை: பெண் காவலர்கள் உள்ளிட்ட தமிழ்நாடு காவல்துறையினர் குறித்து சவுக்கு சங்கர் அவதூறாக பேசியதாக சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் பேரில், தேனியில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில், சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சவுக்கு சங்கரை சிறைக்காவலர்கள் பிளாஸ்டிக் பைப்பால் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், கோவை சிறையில் சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் இது தொடர்பாக, உயர்நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, கோவை சிறைக்குள் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் கூறிய புகாரை மேற்கொள் காட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தனது எக்ஸ் வலைத்தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சமூக ஊடக பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் ஒரு சில சர்ச்சைக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று குற்றம்சாட்டி கைது செய்துள்ளது, காவல்துறை. அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறானதாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோவை சிறையில் அவரை சந்தித்தப்பின் அளித்த பேட்டியில், சவுக்கு சங்கர் சிறையில் அடைப்பதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நல்ல நிலையில் சிறைக்கு சென்றார். இந்நிலையில், கோவை சிறையில் அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார் எனவே மாண்புமிகு நீதிபதி ஒருவரே நேரில் அனுப்பி சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டி மனு அளித்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை சுதந்திரம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வாய்ச்சவடால் விடும் விடியா திமுக அரசில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. மேலும், பெண்களை இழிவாகப் பேசிய, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட பல திமுகவினர் மீது இந்த விடியா அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். சட்ட நடவடிக்கைகளும் நீதியும் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.

சட்டத்தை காவல் துறையே கையில் எடுப்பது என்பது ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இத்தகைய தாக்குதல்கள் தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:"சவுக்கு சங்கரை பிளாஸ்டிக் பைப்பால் தாக்கிய போலீஸ்?" - வழக்கறிஞர் பகீர் குற்றச்சாட்டு - Savukku Shankar Case

ABOUT THE AUTHOR

...view details