தமிழ்நாடு

tamil nadu

மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு முதலீடு செய்யச் சென்றார் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 6:35 PM IST

Updated : Feb 10, 2024, 6:34 AM IST

Edapadi Palaniswami: அதிமுக சார்பில் அவிநாசியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி இவற்றையெல்லாம் முடக்கிய பெருமை திராவிட மாடல் ஆட்சிக்குச் சேரும் என்று விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

திமுக எம்.பி ஆ. ராசாவை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர்:திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் குறித்து அவதூறு பேசியதாகக் கூறி, அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அதிமுக சார்பில் அவிநாசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டத்தில் பேசியதாவது, “எம்.ஜி.ஆர் என்னும் மாமனிதர் உருவாக்கிய கட்சி அதிமுக. சில தலைவர்கள் இருந்தார்கள். ஆனால் நம் தலைவர் மக்களுக்காக வாழ்ந்தவர். அவர் தெய்வப்பிறவி. அதிமுகவின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் ஆ.ராசா பேசி வருகிறார். தொண்டர்களின் மனம் காயப்பட்டிருக்கிறது.

அதிமுக ஆட்சியில் தமிழகம் முன்னேறி வந்தது:தூய மனிதர் எம்.ஜி.ஆர் தொண்டனாக பேசுகிறேன். அவரை நேசிக்கக்கூடிய மக்கள் வெகுண்டெழுந்தால் தாக்குபிடிப்பாரா ராசா? 1967-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் முகத்தைக் காட்டித்தான் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. ராசா இனிமேலாவது உளறுவதை நிறுத்தி விட்டு, நல்லதைப் பேசுங்கள். இல்லையென்றால் மக்கள் திருத்துவார்கள். அதிமுகவின் 30 ஆண்டுகால ஆட்சியில்தான் தமிழகம் முன்னேறி வந்தது.

கூட்டு குடிநீர் திட்டங்களை நிறைவேற்றியது அதிமுக: 50 ஆண்டு கால மக்களின் போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையில், அத்திகடவு - அவிநாசி திட்டத்திற்கு ஆயிரத்து 512 கோடி மாநில நிதி ஒதுக்கப்பட்டு, 90 சதவீதம் முடிந்த நிலையில், 10 சதவீத பணி இரண்டரை ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிமுக தொடங்கிய திட்டம் என்பதால், காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கூட்டுக் குடிநீர் திட்டங்களை திட்டம் போட்டு நிறைவேற்றியது அதிமுக அரசுதான்.

அதிமுகவின் திட்டங்களைத்தான் திறந்து வைக்கின்றனர்: நாம் கொண்டு வந்த திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் நாளை (பிப்.1) ஸ்டிக்கர் ஒட்டி திறக்கவுள்ளார். திமுக ஆட்சி வந்து என்ன திட்டத்தை செய்துள்ளனர்? அதிமுக கொண்டு வந்த திட்டத்தை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வருகின்றனர். 3 ஆண்டு காலத்தில் அதிமுக கொண்டு வந்த திட்டங்களைத்தான் திறந்து வருகின்றனர். திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைக் கொண்டு வந்தது அதிமுக அரசு.

ஸ்மார்ட் சிட்டி திட்டம்: திமுக அரசு அமைந்தவுடன் கடுமையாக மின் கட்டணம் உயர்ந்ததைக் கண்டித்து அறவழியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதற்கு அதிமுக ஆதரவு அளித்தது. ஆனால், திமுக செவுடன் காதில் சங்கூதுவது போல கண்டு கொள்வதில்லை. தொழில் நலிவடைந்து வருகிறது. தொழிலாளர்கள் வேலையிழந்து வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. திருப்பூர் என்றாலே அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் நகருக்கு, நிறைய ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை கொண்டு வந்தோம்.

முதலீட்டை ஈர்க்க போகவில்லை:ஆனால், திமுக ஒன்றும் செய்யவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்று 11 நாட்கள் தங்கியிருந்தார். 3 நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாக செய்தி. சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் ஏன் ஒப்பந்தம் போடவில்லை? வெளிநாடு செல்வதற்காக நாடகம் போட்டுச் சென்றுள்ளார். தொழில் முதலீட்டை ஈர்க்க போகவில்லை. முதலீடு செய்ய போயிருக்கிறார்.

ராசா டெபாசிட் இழக்க வேண்டும்: தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி இவற்றையெல்லாம் முடக்கிய பெருமை திராவிட மாடல் ஆட்சிக்கு சேரும். தனது தேர்தல் அறிக்கையை திமுக நிறைவேற்றவில்லை. அதிமுக தொடர்ந்து நிர்பந்தம் கொடுத்ததால் மகளிர் உரிமைத் தொகை வழங்கினர். அதுவும் தகுதியின் அடிப்படையில் என மூன்றில் ஒரு பங்கு வழங்கினர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்த ஆ.ராசா, நீலகிரியில் டெபாசிட் இழக்க வேண்டும்.

இதுதான் தண்டனை என்பதை உணர்த்த வேண்டும். அதிமுக ஒத்துழைப்போடு, கூட்டணி ஒத்துழைப்போடு 40 தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும். அதற்கான ஆதரவை திரட்ட வேண்டும்” எனப் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், செங்கோட்டையன், பெஞ்சமின், எம்.எஸ்.எம்.ஆனந்தன், கே.என்.விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சு.குணசேகரன், என்.எஸ்.என்.நடராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:"தமிழக அரசின் திட்டங்கள் வெற்றியடைய, மகளிர் சுய உதவிக் குழுவின் பங்களிப்பு அதிகம்" - உதயநிதி ஸ்டாலின்!

Last Updated :Feb 10, 2024, 6:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details