தமிழ்நாடு

tamil nadu

“நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது சட்டத்திற்கு உட்பட்டே நடவடிக்கை” - சென்னை உயர் நீதிமன்றத்தில் என்ஐஏ தகவல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 5:31 PM IST

NIA Raid: நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு எதிராக சட்டத்திற்கு உட்பட்டே நடவடிக்கை எடுப்போம், சம்பந்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராக கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

After request from Naam Tamilar Katchi cadres sufficient time to given to appearance NIA tells Mhc
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை:துப்பாக்கி தயாரிப்பது குறித்து யூடியூப்பில் வீடியோ வெளியிட்டதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இரு பொறியியல் பட்டதாரிகள் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்குப் பதிவு செய்தது. சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கின் அடிப்படையில், தேசிய புலனாய்வு முகமை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர்களின் வீடுகளிலும் இன்று சோதனை நடத்தியது.

இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி, நாம் தமிழர் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை முடக்கும் வகையிலும், கட்சியினருக்கும், அனுதாபிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அனைவரும் தயாராக இருப்பதாகவும், அதற்கு உரிய கால அவகாசத்தை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கும், சட்டம் ஒழுங்குக்கும் ஊறு விளைவிக்கும் வகையில், நாம் தமிழர் கட்சியினர் எந்த தேச விரோத, சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டதில்லை என்பதால், தேசிய புலனாய்வு முகமை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு, அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் எஸ்.சங்கர் மற்றும் சேவியர் பிலிக்ஸ் ஆகியோர் ஆஜராகி, கட்சி நிர்வாகிகளுக்கு காலையில் சம்மன் அளித்துவிட்டு உடனடியாக அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

வெளியூரில் உள்ள நிர்வாகிகளுக்கும் காலையில் சம்மன் அனுப்பி, சென்னையில் இன்றே ஆஜராக வேண்டும் என்று கூறுகிறார்கள். இது சட்ட விதிமீறல் என்றும் தெரிவித்தனர். சில இடங்களில் சோதனையும் நடத்தினார்கள். எனவே அந்த சம்மன்களை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனர்.

என்ஐஏ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், மனுதாரர் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதை என்.ஐ.ஏ ஏற்றுக் கொள்கிறது. அன்றைய தினம் ஆஜராகலாம் என்று தெரிவித்துள்ளோம். விசாரணைக்கு மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதால், கடுமையான நடவடிக்கை ஏதும் இருக்காது. சட்டத்துக்கு உட்பட்டுதான் நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் களமிறங்கிய விஜய்.. கொள்கை, திட்டம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details