தமிழ்நாடு

tamil nadu

தங்கானூரில் களைகட்டிய சேவல் சண்டை..பொங்கலில் சேவல் சண்டை நடத்த அரசுக்கு கோரிக்கை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 11:46 AM IST

cockfighting competition at thiruvallur: திருவள்ளூர் மாவட்டம், தங்கானூர் கிராமத்தில் தைப்பூசம் தினத்தை முன்னிட்டு வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியினை பொங்கல் திருநாளில் நடந்த வேண்டும் என சண்டை சேவல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

cockfighting competition at thiruvallur
தங்கானூரில் களைகட்டிய வெற்றுக்கால் சேவல் சண்டை

தங்கானூரில் களைகட்டிய வெற்றுக்கால் சேவல் சண்டை

திருவள்ளூர்:தமிழ்நாட்டில் அழியும் தருவாயில் உள்ள சண்டை சேவல் இனத்தை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் திருவள்ளூர் மாவட்டம், தங்கானூர் கிராமத்தில் உயர்நீதிமன்ற அனுமதியுடன் சேவல் சண்டை போட்டி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு பல கட்டுப்பாடுகளுடன் சேவல் சண்டை போட்டி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதில், சேவல்கள் காலில் கத்திகள் கட்டக்கூடாது உள்ளிட்ட பல கட்டுபாடுகளை நீதிமன்றம் விதித்துள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்கும் சேவல்களுக்கு கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்த பின்னரே போலீசார் பாதுகாப்புடன் சேவல்கள் களத்தில் மோத விடப்படுகின்றன. இப்போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய 8 மாநிலங்களில் இருந்து சேவல்கள் போட்டியில் பங்கேற்றன. மேலும், நடிகர் தனுஷ் நடித்த ஆடுகளம் திரைப்படத்தில் மோதிய சண்டை சேவல் உட்பட 700-க்கும் மேற்பட்ட சேவல்கள் களத்தில் மோதுகின்றன.

இப்போட்டியில் ஜாவா, கருப்பு வால், யாகுத், பீலா, தும்மர், சீதா, நூரி, காதர் பேட்டை மாதிரி, படிவகல்வா ஆகிய பத்து வகையான சேவல்கள் களத்தில் இறக்கப்படுகிறது. இந்த போட்டியில் மூன்று சுற்றுகளில் வெற்றி பெறும் சேவல்களின் உரிமையாளருக்கு தங்க மெடல் மற்றும், சான்றிதழ், கேஸ் அடுப்பு பரிசாக வழங்கப்படுகின்றது.

மேலும், தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டிகள் போன்று அழிந்து வரும் சேவல் சண்டை போட்டிகளையும் ஊக்கப்படுத்தும் விதமாக, பொங்கல் திருநாளை முன்னிட்டு சேவல் சண்டை போட்டி நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும் என சேவல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து போட்டி நடத்தும் தேவா கூறுகையில், "உயர்நீதிமன்றம் உத்தரவின் படி சேவல் சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி. இந்த போட்டியில் 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்கின்றன. அதிகப்படியான சேவல்கள் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து வந்துள்ளன" என்றார்.

இதுகுறித்து வழக்கறிஞர் புரட்சி பாரதம் சுரேஷ் கூறுகையில்,"தங்கானூர் கிராமத்தில் 10ஆம் ஆண்டு சேவல் வெற்றுக்கால் சண்டை சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் இந்தியாவின் 10 மாநிலங்களில் இருந்து சேவல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

தமிழகத்தின் பாரம்பரிய நிகழ்ச்சியாக சேவல் சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் உள்ள அனைத்து சேவல் சண்டை வீரர்களும் இந்த போட்டியினை வரவேற்கின்றனர். மேலும், சேவல் சண்டை போட்டியினை பொங்கல் திருநாளினை முன்னிட்டு நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

ABOUT THE AUTHOR

...view details