தமிழ்நாடு

tamil nadu

கோவை தொகுதியில் களமிறங்கும் அண்ணாமலை.. பாஜகவின் பக்கா பிளான்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 1:28 PM IST

Updated : Mar 12, 2024, 5:00 PM IST

Coimbatore MP Seat: 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாமலை
அண்ணாமலை

கோவை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் அதற்கு தீவிரமாகத் தயாராகி வருகின்றன. தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை மிகவும் பரபரப்பாக நடந்து கொண்டு வருகிறது. அந்த வகையில், கோவை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் கடுமையான போட்டி நிலவி வந்தது.

ஒரு பக்கம் சிபிஎம் மறுபக்கம் மக்கள் நீதி மையம் என இரண்டு கட்சிகளும் கடுமையாக மூட்டி மோதி வந்தன. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்திற்கு மாநிலங்களவை கொடுத்து, சிபிஎம்க்கு திண்டுக்கல் மற்றும் மதுரை தொகுதிகளை ஒதுக்கி சற்றும் எதிர்பாராத அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது, "தொகுதிப் பங்கீடு இறுதி ஆனது. கடந்த முறை மதுரை, கோவையில் போட்டியிட்டோம். இந்த முறை மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. நாங்கள் கோவையை விட்டுக்கொடுத்தோம். திமுக திண்டுக்கல்லை விட்டுக்கொடுத்தது" என தெரிவித்தார்.

இந்த அறிவிப்பின் மூலம் கோவை தொகுதியில் நேரடியாக திமுக களம் இறங்கும் முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது அரசியல் களத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கோவை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை களம் இறங்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி வருகிறது.

அதேசமயம் திமுக சார்பில் மருத்துவ அணி மாநில துணைச் செயலாளர் டாக்டர் கோகுல், முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. இருப்பினும் திமுக சார்பிலிருந்து எவ்வித அதிகாரப்பூர்வத் தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

1952ஆம் ஆண்டு முதல் கோவை நாடாளுமன்றத் தொகுதி 17 தேர்தல்களைச் சந்தித்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும், திமுக மற்றும் பாஜக தலா 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கோவை நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை திமுக, அதிமுக கட்சிகள் நேரடியாகப் போட்டியிட்டதை விட, கூட்டணிக் கட்சிகளுக்கே அதிக முறை ஒதுக்கீடு செய்துள்ளன.

அந்த வகையில் 18வது நாடாளுமன்றத் தேர்தலில் கடும் போட்டி நிலவும் நிலையில், கோவை தொகுதியை பாஜக குறி வைத்து அண்ணாமலையை நிற்க வைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறது. 1998ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு அதிமுக கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தித்த பாஜக வெற்றி பெற்றது.

பின்னர் ஆட்சி கவிழ்ப்பு சம்பவத்திற்கு மீண்டும் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் இணைந்து வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து கோவை தொகுதியில் பாஜகவிற்கு அதிக ஆதரவு இருப்பதாகக் கருதுகின்றனர்.

மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதும், அதிகமான வட மாநிலத்தவர் வசிக்கக்கூடிய தொகுதி என்பதாலும் பாஜகவின் செல்வாக்கு மேலும் உயர்ந்துள்ளதாகவே கருதுகின்றனர்.

இதனால், இந்த முறை கோவை தொகுதியில் பிரபலமான ஒருவரை நிறுத்தினால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் பாஜக தலைவர் அண்ணாமலையை நிறுத்த கட்சி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.

இதையும் படிங்க:தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு!

Last Updated : Mar 12, 2024, 5:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details