தமிழ்நாடு

tamil nadu

கோவை - அயோத்தி ஆஸ்தா சிறப்பு ரயில் சேவை துவக்கம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 9:30 AM IST

Aastha special train: கோவையில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் சிறப்பு ரயில் சேவையை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி ஸ்ரீனிவாசன் நேற்று (பிப்.8) கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

கோவை அயோத்தி சிறப்பு ரயில் சேவை துவக்கம்
கோவை அயோத்தி சிறப்பு ரயில் சேவை துவக்கம்

ஆஸ்தா சிறப்பு ரயில்

கோயம்புத்தூர்: கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி, உத்தர பிரதேசம் அயோத்தியில் சுமார் ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ராமர் கோயில் சாமி தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டது. மேலும், கோயிலுடன் அப்பகுதியில் சர்வதேச விமான நிலையம் மற்றும் பிரம்மாண்ட ரயில் நிலையம் எனக் கட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் அய்யோதி ராமர் கோயிலுக்கு செல்ல மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்களும், நேரடி விமான சேவைகளும் துவங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக கோவையில் இருந்து சிறப்பு ரயில் சேவை நேற்று (பிப்.8) அன்று துவக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 745 பயணிகளோடு, நேற்றிரவு இந்த சிறப்பு ரயில் சேவையானது துவக்கப்பட்டது. வண்டி எண் -06154 கொண்ட இந்த ரயிலுக்கு, "ஆஸ்தா சிறப்பு ரயில்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதையும் படிங்க:கோவை டிலைட் தியேட்டர் இடிப்பு? நினைவுச் சின்னம் அமைக்க கோரிக்கை!

இந்த நிகழ்வில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் சின்ஹா உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் மலர் தூவி பக்தர்களை வழி அனுப்பி வைத்தனர். இந்த ரயில் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.11) அயோத்தியை சென்றடைகிறது.

இந்த சிறப்பு ரயில் துவங்கப்படுவதை முன்னிட்டு, மோப்ப நாய்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதனிடையே, வரும் 13ஆம் தேதி கோவையில் இருந்து அயோத்திக்கு அடுத்த ரயில் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கோவையில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், தமிழகத்திலிருந்து அயோத்தி ராமர் கோயில் செல்லும் பக்தர்களுக்காக, மத்திய அரசு 34 சிறப்பு ரயில்களை கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் இருந்து இயக்கப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். மேலும், கோவையில் இருந்து அயோத்தி புறப்பட்ட பக்தர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:"திமுக பாஜகவை பார்த்துப் பயப்படுவதால் நாங்கள்தான் தமிழ்நாட்டில் எதிர்கட்சி" - அமர் பிரசாத் ரெட்டி

ABOUT THE AUTHOR

...view details