தமிழ்நாடு

tamil nadu

வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி வன பாதுகாப்பு செயலாளர் உயிரிழப்பு - ரூ.50,000 நிதியுதவி! - Valparai Elephant attack

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 10:24 AM IST

Updated : May 9, 2024, 3:28 PM IST

Valparai Elephant attack: வால்பாறையை அடுத்த வில்லோனி நெடுங்குன்றம் பகுதியில் ஒற்றை காட்டு யானை தாக்கி, மலைவாழ் மக்களின் வன பாதுகாப்புச் செயலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இறந்தவரின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

யானை தாக்கி உயிரிழந்த ரவி புகைப்படம்
யானை தாக்கி உயிரிழந்த ரவி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வில்லோனி அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் 74 மலைவாழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் ராஜ் என்பவரின் மகன் ரவி (56), மலைவாழ் மக்களின் வன பாதுகாப்புச் செயலாளராக உள்ளார். இந்த நிலையில், ரவி நேற்று இரவு 8 மணி அளவில் சக நண்பர்களான விஜயன், ராமச்சந்திரன், முருகானந்தம், தர்ஷன், கண்ணன் உள்ளிட்ட ஆறு பேருடன் வீட்டின் அருகில் உள்ள அடர்ந்த காட்டு வழியில் சென்றுள்ளார்.

அப்போது, அவ்வழியில் ஒற்றைக் காட்டு யானை நின்றுள்ளது. ரவியின் சக நண்பர்கள் மூன்று பேர் முன்னோக்கிச் சென்றிருந்த நிலையில், அவர்கள் பின்னாடி ரவி நடந்து சென்றுள்ளார். அப்போது யானையைப் பார்த்த அனைவரும், அங்கும் இங்கும் ஓடியுள்ளனர். இதில் ரவி மட்டும் ஒற்றைக் காட்டு யானையிடம் மாட்டிக் கொண்டதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, யானை ரவியைத் தாக்கியதில், அவரது மார்பு, முகம், கை, கால்களில் முறிவு ஏற்பட்டு, பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதில் விஜயன், ராமச்சந்திரன் ஆகிய இருவரும் யானையைக் கண்டு ஓடிய போது, தவறி விழுந்ததில் விஜயனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. ராமச்சந்திரனுக்கு கை மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள், காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனிடையே, அனைவரும் யானையிடமிருந்து தப்பித்து விட்டார்கள் என நினைத்து எல்லோரும் சந்தித்த போது ரவி மட்டும் காணவில்லை.

உடனடியாக, அனைவரும் காட்டிற்குள் தீப்பந்தத்துடன் சென்றபோது, அங்கு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ரவியை பார்த்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வனத்துறைக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ், ரவியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பின், மலைவாழ் மக்களில் ஒருவர் காட்டு யானையிடம் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் நடந்த அரை மணி நேரத்தில் இருந்து, வால்பாறை வருவாய்த்துறை துணை தாசில்தார் ஸ்ரீ ராஜ், ஆர்ஐ வினோத் குமார், பன்னீர்செல்வம், ஈஸ்வரன் மற்றும் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஒற்றை காட்டு யானை தாக்கி உயிர் இழந்த ரவி குடும்பத்துக்கு வனத்துறை சார்பில் முதல் தவணையாக ரூபாய் 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இவர் மலைவாழ் மக்கள் என்பதால், தமிழக அரசின் மூலம் பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் இதில் காயம் அடைந்த இரண்டு பேருக்கு ரூபாய் 50 ஆயிரம் ரூபாய் விதம் தரப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கோவையில் மீண்டும் ஒரு பெண் யானை உயிரிழப்பு.. வனத்துறையினர் ஆய்வு! - Elephant Death In Coimbatore

Last Updated :May 9, 2024, 3:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details