தமிழ்நாடு

tamil nadu

நாளை பிளஸ் 2 பொதுத்தேர்வு.. வினாத்தாள் அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 4:14 PM IST

12th Public Exam: தமிழகம் முழுவதும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (மார்ச் 1) தொடங்க உள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் வினாத்தாள் இருக்கும் அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

12th Public Exam
பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள் இருக்கும் அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (மார்ச் 1) தொடங்க உள்ளது. அந்த வகையில், நெல்லை மாவட்டத்தில் 1,479 பள்ளிகளில் இருந்து மொத்தம் 20 ஆயிரத்து 795 மாணவர்களும், இதுதவிர சிறைவாசிகள் மற்றும் வெளியில் இருந்து தேர்வு எழுதுவோர் என மொத்தம் 20 ஆயிரத்து 814 பேர் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுத உள்ளனர்.

இந்த நிலையில், தேர்வுகளைக் கண்காணிக்க திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்துசாமி வழிநடத்தலின் அடிப்படையில், தொடக்கக்கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் அமைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் அச்சிடப்பட்டு, தயார் நிலையில் நெல்லை மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு, அவற்றை தற்போது அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, பாதுகாப்பாக முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், வினாத்தாள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைத்ததுடன், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 70 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாது, தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் தடையில்லா மின்சாரம் மற்றும் தட்டுப்பாடு இல்லாத குடிநீர் உள்ளிட்ட தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஒவ்வொரு தேர்வு நாள் அன்றும், பாதுகாப்பு அறையில் உள்ள வினாத்தாள் தேர்வு மையங்களுக்கு பத்திரமாக எடுத்துச் செல்வதற்கான பிரத்தியேக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ஸ்ரீதேவி, காணொலிக் காட்சி வாயிலாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், "பள்ளிகளில் உள்ள தேர்வு அறை மற்றும் கண்காணிப்பாளர் அறை தவிர்த்து, அனைத்து அறைகளும் பூட்டப்பட வேண்டும். தேர்வு மேற்பார்வையாளர்களுக்கு டீ, காபி மற்றும் வடை என எதையும் கொடுக்க தேர்வு நடைபெறும் மையத்திற்குள் வரக்கூடாது" என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும், தேர்வு தலைமை கண்காணிப்பாளர், தேர்வு மேற்பார்வையாளர் என யாரும் பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தக் கூடாது. தேவை எனில், பட்டன் போன்களை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும், தேர்வு அறை தொடர்பான அறிவிப்பு பலகையை மாணவ மாணவிகளுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும்" உள்ளிட்ட ஆலோசனைகளையும் வழங்கினார்.

இதையும் படிங்க:12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு... அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறும் முக்கிய விதிமுறைகள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details