தமிழ்நாடு

tamil nadu

ஓவர்நைட்டில் பிரபலமான சஷாங்க் சிங்.. ஐபிஎல் ஏலத்தில் மாற்றி எடுக்கப்பட்ட சுவாரஸ்ய கதை! - shashank singh IPL auction

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 5, 2024, 5:33 PM IST

shashank singh IPL auction: குஜராத் அணிக்கு எதிராக 61 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை வெற்றி பெறச் செய்த சஷாங்க் சிங் ஏலத்தில் தவறாக எடுக்கப்பட்ட வீரர் என கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளார்.

ஓவர்நைட்டில் பிரபலமான சஷாங்க் சிங்
ஓவர்நைட்டில் பிரபலமான சஷாங்க் சிங்

சென்னை: 17வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரிட்சை மேற்கொண்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி கில், சாய் சுதர்சன், டெவாட்டியா ஆகியோரின் அதிரடியில் 20 ஓவர்களில் 199 ரன்கள் எடுத்தது.

இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணியின் தவான், பேர்ஸ்டோவ் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாக பிரப்சிம்ரன் சிங்(35) ஓரளவு ரன்கள் சேர்த்தார். பஞ்சாப் அணி ஒரு கட்டத்தில் 115 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. பின்னர் களமிறங்கிய சஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். கடைசி 5 ஓவர்களில் 62 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்த ஜோடி சிக்சர்களாக அடித்து ரன்கள் சேர்த்தது.

ஒரு கட்டத்தில் அஷுதோஷ் சர்மா அவுட்டான பின்பு சஷாங்க் சிங் ஆட்டத்தை தன் கையில் எடுத்தார். கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட நிலையில், ஒரு பந்து மீதமிருக்க பஞ்சாப் அணி 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த சஷாங்க் சிங் 29 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார்.

நேற்று முதல் அனைவராலும் பேசப்படும் சஷாங்க் சிங் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட கதை மிகவும் சுவாரஸ்யம் வாய்ந்தது. சஷாங்க் சிங்கை கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணி 20 லட்ச ரூபாய்க்கு எடுத்தது. ஆனால் அந்த ஏலத்தில் சஷாங்க் சிங் என்ற பெயரில் 19 வயதில் ஒரு வீரரும், 32 வயதில் ஒரு வீரரும் இருந்துள்ளனர்.

நேற்று அபாரமாக விளையாடிய 32 வயது சஷாங்க் சிங் ஏலத்தில் வந்த போது பஞ்சாப் அணி நிர்வாகம் இவர் 19 வயது வீரர் என நினைத்து, ஏலத்தில் எடுத்துள்ளது. ஆனால் ஏலத்தில் எடுத்த பிறகு தான் சஷாங்க் சிங் என்ற பெயரில் வேறு ஒரு வீரரை ஏலத்தில் எடுத்தது தெரியவந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஏலம் முடிந்த பிறகு பஞ்சாப் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “சஷாங்க் சிங் என்ற பெயரில் இரண்டு வீரர்கள் இருந்ததால் எங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. நாங்கள் சரியான சரியான வீரரை ஏலத்தில் எடுத்துள்ளோம் என நம்புகிறோம்” என பதிவிட்டிருந்தனர்.

மும்பையை சேர்ந்த சஷாங்க் சிங் டி20 போட்டிகளில் 815 ரன்கள் எடுத்துள்ளார். முன்னதாக ஹைதராபாத் அணியில் இருந்த போது தனது பேட்டிங் திறமையால் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாராவை கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜூலை 5ஆம் தேதி முதல் தொடங்குகிறது... டிஎன்பிஎல் கிரிக்கெட் கொண்டாட்டம்! - TNPL 2024 Schedule

ABOUT THE AUTHOR

...view details