தமிழ்நாடு

tamil nadu

விராட் கோலி அவுட் நோ-பாலா?.. சர்ச்சையின் பின்னணி என்ன? - Virat Kohli angry

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 10:57 PM IST

Virat Kohli: கொல்கத்தா அணிக்கு எதிரான விராட் கோலியின் விக்கெட் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Virat Kohli
Virat Kohli

கொல்கத்தா: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், முதலில் கொல்கத்தாவே பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 222 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிலிப் சால்ட் 48, ஸ்ரேயாஸ் ஐயர் 50 ரன்களும் எடுத்தனர். ஆர்.சி.பி அணியும் நன்றாக பந்து வீசினாலும், அவ்வப்போது சற்று ரன்களை வாரி வழங்கியதால் இந்த ஸ்கோரை கொல்கத்தாவால் எட்ட முடிந்தது.

இதனைத் தொடர்ந்து, ராயல் சேலஞ்சர்ஸ் அணி 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடியது. ஆனால், துரதிஷ்டவசமாக 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், 2வது ரன்னுக்கு ஓட முயன்ற போது, பெர்குசன் ரன் அவுட் செய்யப்பட்டார். இது ஒருபக்கம் ஆர்.சி.பி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், விராட் கோலியின் அவுட் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோலி அவுட்டின் சர்ச்சை: ஆர்.சி.பி அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி - டூ பிளெசிஸ் களம் இறங்கினர். 7 பந்துகளில் 2 சிக்சர்கள், 1 ஃபோர்கள் என அதிரடி காட்டிய விராட் கோலி, ஹர்ஷித் ராணா வீசிய ஸ்லோ ஃபுல்டாஸ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஹர்ஷித் ராணா வீசிய ஸ்லோ ஃபுல்டாஸ் பந்தை விராட் கோலி கிரீசுக்கு வெளியே இறங்கி வந்து ஆட, அது எதிர்பாராத விதமாக ராணாவிடமே கேட்ச் ஆகிவிட்டது. கள நடுவரும் அதற்கு அவுட் கொடுத்து விட்டார். பந்து இடுப்பு உயரத்திற்கு மேலே சென்றதால் சந்தேகத்தின் அடிப்படையில் கோலி ரிவுயூ கேட்டார்.

அதன்படி, ஹாக்ஐ தொழில்நுட்பம் மூலம் பந்து செல்லும் கோணத்தையும், விராட் கோலி அதனை எதிர்கொண்ட கோணத்தையும் வைத்து நடுவர்கள் ஆய்வு செய்தனர். இடுப்பு உயரத்திற்கு மேலே நோ பால் என்ற அறிவிப்பு, வீசப்பட்ட பந்தானது பேட்ஸ்மேன் கிரீஸின் உள்ளே இருக்கும் போது, இடுப்பு உயரத்திற்கு மேலே வந்தால் மட்டுமே பொருந்தும்.

மாறாக, இந்த விஷயத்தில் விராட் கோலி கிரீஸை விட்டு வெளியே இருந்து பந்தை எதிர்கொண்டதால், பந்து பின்னே செல்லும் போது உயரம் குறைந்துவிடும் என ஹாக்ஐ தொழில்நுட்பம் காட்டியது. இதனால் விராட் கோலியின் அவுட்டை நடுவர்கள் உறுதி செய்து அறிவித்தனர்.

இதனால் அதிருப்த்தி அடைந்த விராட் கோலி, களத்தை விட்டுப் போவதற்கு முன்னதாக, நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. ரசிகர்கள் விராட் கோலியின் அவுட்டை சமூக வலைத்தளங்களில் விவாதத்துக்கு உள்ளாக்கி வருகின்றனர்.

மேலும், விராட் கோலியின் அவுட் குறித்து டூ பிளெசிஸ் கூறியதாவது, "விதிகள் என்பது அனைவருக்கும் ஒன்று தான். நானும், விராட்டும் அந்த பந்து இடுப்புக்கு மேலே இருந்ததாகவே நினைத்தோம். ஆனால், விராட் கோலி கிரீஸின் வெளியே இருந்த இடத்தில் இருந்து பந்து கணிக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். இதன் காரணமாக, இரு அணிகளும் தங்களுக்கு எது சாதகமான முடிவு, அதனை சரி என நினைக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கடைசி வரை போக்கு காட்டிய பெங்களூரு.. 1 ரன்னில் கொல்கத்தா த்ரில் வெற்றி! திக்.. திக்.. கிளைமாக்ஸ்! - IPL2024 KKR Vs RCB Match Highlights

ABOUT THE AUTHOR

...view details