தமிழ்நாடு

tamil nadu

கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி கோலாகலம்.. ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 1:01 PM IST

Masi Magam: மாசி மக பெருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் மகா மக திருக்குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, மறைந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்பணங்கள் கொடுத்து வழிபாடு செய்தனர்.

Masi Magam
மாசிமக பெருவிழா

கும்பகோணத்தில் களைகட்டிய மாசி மகம் திருவிழா

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாசி மகா மகம் உலக பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் மாசி மாதம், மக நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி தினத்தில், மாசி மக தீர்த்தவாரி உற்சவம் 10 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு மாசி மகம் சைவ தலங்கள் ஐந்தில், கடந்த பிப்ரவரி 15ஆம் தேதியும், வைணவ தலங்கள் மூன்றில் பிப்ரவரி 16ஆம் தேதியும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாசி மக பெருவிழாவின் 9ஆம் நாளான நேற்று (பிப்.23) மாலை மகாமக திருக்குளத்தின் கரைகளில் அமைந்துள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயில், அமிர்தவள்ளி சமேத அபிமுகேஸ்வர சுவாமி திருக்கோயில் மற்றும் சௌந்தரநாயகி சமேத கௌதமேஸ்வரர் திருக்கோயில் என 3 திருக்கோயில்களிலும் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான கலந்துக்கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான 10ஆம் நாளான இன்று (பிப்.24) அதிகாலை கும்பகோணம் மகாமக திருக்குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, மறைந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்பணங்கள் கொடுத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து, காலை 9 மணி அளவில், வைணவ தலங்களில் ஒன்றான சக்ரபாணிசுவாமி திருக்கோயில் திருத்தேரோட்டம் நடைபெற்றது.

பின்னர், காலை 12 மணியளவில் காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடிஸ்வரர், அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 10 சிவன் கோயில் சுவாமிகள் அம்பாளுடன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுடன், கோயிலில் இருந்து வீதியுலாவாகப் புறப்பட்டு, மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருள மகாமக திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாசி மகத்திற்கு வருகௌ புரிந்த பக்தர் பவானிசங்கர் கூறுகையில், “ இதுவரை நாங்கள் 3 மகா மகத்திற்கு வருகை புரிந்துள்ளோம். தீர்த்தவாரி நடைபெரும் இடங்களில் குளிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டு இன்று இங்கு வருகை புரிந்திருக்கின்றோன்” என்றார்.

மேலும், இது குறித்து பக்தர் ராமச்சந்திரன் கூறுகையில், “ ஒவ்வொரு வருடமும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக நாங்கள் வருகிறோம். இதனால், மனத்திற்கும், தங்களது குடும்பத்திற்கும் நிம்மதி கிடைக்கும்” என்றார்.

இதையும் படிங்க:பிப்.26-இல் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details