தமிழ்நாடு

tamil nadu

இஸ்ரேல் குண்டுவீச்சில் 10 வருடங்களுக்குப் பிறகு பிறந்த இரட்டைக் குழந்தைகளை இழந்த தாய்; காசாவில் நடந்த கொடூரம்..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 3, 2024, 10:28 PM IST

Israel Palestine War: காசாவில் உள்ள ஒரு பெண் 10 வருடங்களுக்குப் பிறகு கர்ப்பமாகி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த நிலையில் நேற்று (மார்ச் 02) இரவு ரஃபாவில் உள்ள அவர்களது வீட்டை இஸ்ரேல் படையினர்க் குண்டு வீசித் தாக்கியதில் அந்தப் பெண் தனது இரட்டைக் குழந்தைகளையும் கணவரையும் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Israel Palestine War
Israel Palestine War

ரஃபா (காசா): காசா நகரத்தில் அமைந்துள்ள ரஃபா பகுதியில் வசித்து வந்த ராணியா அபு அன்சா என்ற பெண் திருமணம் ஆகிய 10 வருடங்கள் ஆன நிலையில் குழந்தை இல்லாமல் பல்வேறு மருத்துவச் சோதனைகள் எடுத்துக்கொண்டு சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு தற்போது கருத்தரித்துக் கடந்த 5 மாதத்திற்கு முன்பு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

இந்த நிலையில், காசா நகரத்தில் அமைந்துள்ள ரஃபாவில் நேற்று (மார்ச் 02) இரவு இஸ்ரேலியப் படையினர்க் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். அப்போது, ராணியா அபு அன்சா மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கியிருந்த வீட்டையும் இஸ்ரேலியப் படையினர் தாக்கியது. இந்த தாக்குதலில், ராணியா அபு அன்சாவின் ஐந்து மாத இரட்டைக் குழந்தைகளான, நயீம் மற்றும் விஸ்ஸாம் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் 11 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது.

இதுமட்டும் அல்லாது, இடிபாடுகளுக்கு அடியில் மேலும் ஒன்பது பேர் காணவில்லை என்று தப்பிப்பிழைத்தவர்கள் மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து ராணியா அபு அன்சா கூறுகையில், "இரவு சுமார் 10 மணியளவில் எனது ஆண் குழந்தையான நயீமுக்கு தாய்ப்பால் கொடுக்க ஒரு கையிலும், பெண் குழந்தையான விஸ்ஸாமை மறு கையிலும் வைத்துக்கொண்டு தூங்கச் சென்றேன். எனது கணவன் அவர்கள் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாகத் தக்குதல் நடத்தப்பட்டது. அந்த தக்குதலில் எங்கள் வீடு இடிந்து விழுந்தது" என்று கூறினார்.

மேலும், தொடர்ச்சியாகப் பேசிய ராணியா அபு அன்சா, "நான் என் குழந்தைகள் மற்றும் என் கணவருக்காகக் கத்தினேன். ஆனால், அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர். அவர்களின் தந்தை என்னை விட்டு விட்டு அவர்களை அழைத்துச் சென்றுவிட்டார்" என்று கூறியபடி அழுதுகொண்டே தனது குழந்தைகளின் சடலங்களைத் தன் மார்பில் கட்டிக்கொண்டார்.

இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கியது. இதில் காசா மீது இஸ்ரேல் படையினர் மும்முனை தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இஸ்ரேலியப் படையின் வான்வழித் தாக்குதலால் காசாவில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாக்கினர்.

இந்த நிலையில், தற்போது காசா நகரத்தில் அமைந்துள்ள ரஃபா பகுதியில் நேற்று (மார்ச் 02) இரவு இஸ்ரேலியப் படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் பெண் ஒருவர் 10 வருடங்களுக்குப் பிறகு பிறந்த தனது இரட்டைக் குழந்தைகளையும் தனது கணவரையும் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு! 2வது முறை பிரதமராக பதவியேற்பு!

ABOUT THE AUTHOR

...view details