தமிழ்நாடு

tamil nadu

"நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் பெயர்.. அவரால் நடிகர் சங்கத்திற்கே பெருமை" - ஆர்.கே.செல்வமணி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2024, 4:53 PM IST

நடிகர் விஜயகாந்த் பெயரை நடிகர் சங்கம் வளாகத்திற்கு வைக்க வேண்டும் விஜயகாந்த் நடிகர் சங்கத்தில் இருந்ததால் நடிகர் சங்கத்திற்கே பெருமை என விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சியில் இயக்குநர் ஆர்.கே செல்வமணி கூறினார்.

விஜயகாந்தால் நடிகர் சங்கத்திற்கே பெருமை
விஜயகாந்தால் நடிகர் சங்கத்திற்கே பெருமை

சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சி காமராஜர் அரங்கில் நடைபெற்றது.

அப்போது மேடையில் கண் கலங்கியபடி பேசிய நடிகர் ராதாரவி, "நான் விஜயகாந்த் இவ்வளவு சீக்கிரம் மறைவான் என்று எதிர்பார்க்கவில்லை. நடிகர் சிவாஜிக்கும், விஜயகாந்துக்கும் என்ன சம்மந்தம், ஆனால் அவருடைய இறப்புக்குப் கடைசி வரை இருந்தார் விஜயகாந்த். அவர் மீது ஓரு முறை கல் வீசினார்கள். அந்த விஷயம் தெரிந்ததும் யார் செய்தார்களோ அவர்களை நேரில் சென்று அடித்தோம். இனி விஜயகாந்த் கிடைப்பானா என்று தெரியவில்லை ஆனால் நம்மோடு தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்" என கூறினார்.

இயக்குநர் ஆர்.கே செல்வமணி பேசுகையில், "நடிகர் விஜயகாந்த் பெயரை நடிகர் சங்கம் வளாகத்திற்கு வைக்க வேண்டும். விஜயகாந்த் நடிகர் சங்கத்தில் இருந்ததால் நடிகர் சங்கத்திற்கே பெருமை. புலன் விசாரணை படத்தின் பூஜை டிசம்பர் 28ஆம் தேதி நடைபெற்றது. அதே டிசம்பர் 28ஆம் தேதி விஜயகாந்த் மறைந்தார் அந்த நாளை மறக்க மாட்டேன்" என்றார்.

நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், "இப்படி ஒரு நாளை எதிர்பார்க்கவில்லை. என்னை முதலில் பார்க்கும் போது எப்படி பேசுவாரோ அதே மாதிரி தான் பெரிய நட்சத்திரம் ஆனதுக்கு பிறகும் பேசுவார். பெரிய தலைவர்களுக்கு வரும் கூட்டம் விஜயகாந்துக்கு வந்தது தான் அவர் சேர்த்த சொத்து. அவருடைய நியாயமான கோவம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த துணிச்சல் பல நேரங்களில் நடிகர் சங்கத்திற்கு உதவியாக இருந்தது. Good bye captain" என்றார்.

நடிகை தேவயானி பேசுகையில், "விஜயகாந்த் அவர்களே என்னை தொலைபேசியில் அழைத்து நீங்கள் நடிகர் சங்கத்தில் இணைந்திருங்கள் என்று கூறினார். ஒரு தலைவரே அப்படி பேசியது மெய் சிலிர்க்க வைத்தது. விஜயகாந்த் இருக்கும் போது நடிகர் சங்கம் எப்படி இருந்தது. நடிகர் சங்கத்தில் அவர் இருக்கும் போது எல்லா நடிகர்களையும் ஒரே வாகனத்தில் அழைத்து சென்றார்.

அதே போல இப்போது நடிகர் சங்கத்தில் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தி காட்ட முடியுமா. அவருடன் பணியாற்றும் போதும் அனைவரையும் ஒரே மாதிரி நடத்துவார். அவர் இருந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது" என்று பேசினார்.

நடிகை ரேகா பேசுகையில், "ஒரு 5, 6 படங்கள் நடித்திருப்பேன். அவருடன் நடித்தது எனது பாக்கியம். நடிகனாக, அரசியல்வாதியாக வெற்றி பெற்றார், நடிகர் சங்கத்தை வெற்றி பெற செய்தார். ஆனால் உடலை கவனிக்க மறந்து விட்டார். கருத்து வேறுபாடுகளை மறந்து நடிகர் சங்கத்தை கட்டி முடிக்க வேண்டும்.

2 பகுதிகளாக பிரிந்த கூட்டம் ஒன்றாக சேர வேண்டும். அந்த கட்டடத்தை கட்டி முடித்தால் தான் விஜயகாந்தின் ஆத்மா சாந்தி அடையும். வரவில்லை என்று வராதவர்களை பற்றி குறை கூறாதீர்கள் அவர்கள் வீட்டில் கவலை படலாம் வர முடியாத சூழல் இருக்கலாம் அதனால் குறை கூறுவதை நிறுத்தி விடுங்கள்" என்று பேசினார்.

இதையும் படிங்க:25 ஆண்டை நிறைவு செய்யும் ‘துள்ளாத மனமும் துள்ளும்’.. எஸ்.எழில் கொண்டாட்ட விழாவிற்கு விஜய் வருகிறாரா?

ABOUT THE AUTHOR

...view details