தமிழ்நாடு

tamil nadu

உத்தம வில்லனாக மாறும் லிங்குசாமி - கமல்ஹாசன் விவகாரம்.. என்னதான் நடந்தது? முழு விவரம்! - Kamalhaasan Vs Lingusamy

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2024, 2:59 PM IST

complaint against Kamal Haasan: உத்தம வில்லன் படம் தொடர்பான விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனின் மீது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், உண்மையில் உத்தம வில்லன் தயாரிப்பு மற்றும் வெளியீட்டின்போது என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

லிங்குசாமி - கமல்ஹாசன் புகைப்படம்
லிங்குசாமி - கமல்ஹாசன் புகைப்படம் (Credits to etv bharat tamilnadu)

சென்னை:தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குநராக வலம் வருபவர் லிங்குசாமி. இவரது படைப்பில் ரன், பையா, சண்டக்கோழி ஆகிய படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, தனது சகோதரர் உடன் இணைந்து 'திருப்பதி பிரதர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார். 2006-ல் தொடங்கிய இந்த நிறுவனம் மூலம் பையா, வழக்கு எண் 18/9, தீபாவளி, கோலிசோடா, கும்கி, உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களை தயாரித்து உள்ளனர்.

உத்தம வில்லன் பிரச்சினை:'திருப்பதி பிரதர்ஸ்' தயாரிப்பில், கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான 'உத்தமவில்லன் திரைப்படம்' மிகப்பெரிய தோல்விப் படங்களில் ஒன்றாக மாறியது. இதனால் மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கினார் லிங்குசாமி.

இப்படத்தின் பிரச்சினை குறித்து பேட்டி ஒன்றில் இயக்குநர் லிங்குசாமி கூறியதாவது, "உத்தம வில்லன் எங்களுக்கு மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலை கொடுத்தது. குறை சொல்லவில்லை, நிஜம் அதுதான். அதற்காக வேறு ஒரு படம் பண்ணித் தருவதாக கமல்ஹாசன் எழுதிக் கொடுத்துள்ளார்.

ரூ.30 கோடிக்கு பண்ணி த்தருவதாக சொன்னார்‌. நாங்கள் எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை. அவர்மீது உள்ள மரியாதையில் அடிக்கடி சென்று கேட்டோம். விரும்பிதான் சென்றோம். ஆனால் நாங்கள் கேட்டது வேறு. தேவர் மகன்‌ மாதிரி ஒரு படம் கேட்டோம்.

ஒரு அருமையான கதை சொன்னார். ஆனால், வாரம் ஒருமுறை அதை மாற்றினார். அவருடைய சிக்கல் அது. எனது சகோதரர் 'போஸ் த்ரிஷ்யம்' ரீமேக் பண்ணலாம் என்றார். ஆனால், கமல் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை, அதன்பிறகு உத்தம வில்லன் பண்ணலாம் என்றார். ஆனால் எங்களுக்கு அது பிடிக்கவில்லை.

ஒரு கலைஞனாக கமல் போன்று யாரையும் பார்க்க முடியாது. உத்தம வில்லன் எனது கனவுப் படமாக பண்ணித் தருகிறேன். பின்னர் எந்த பிரச்னை வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்றார். படம் முடிந்த பிறகு மாற்றங்கள் செய்யச்சொல்லி ஒரு பட்டியல் எடுத்துச் சென்றோம். சரி செய்கிறேன் என்றார். ஆனால் செய்யவில்லை. மேலும், என்னை நம்புங்கள், அப்படியே விடுங்கள் என்று சொன்னார் கமல்" என்று லிங்குசாமி பேசியிருந்தார்.

கமல் மீது புகார்:இந்த நிலையில் 'திருப்பதி பிரதர்ஸ்’ சார்பில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உத்தமவில்லன் திரைப்படத்தின் தோல்வியைத் தொடர்ந்து தங்களுக்கு வேறு ஒரு படம் பண்ணித் தருவதாக கமல்ஹாசன் கூறினார்.

ஆனால், படம் வெளியாகி 9 வருடங்களாகியும் இதுவரை அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே, தயாரிப்பாளர் சங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டு கமல்ஹாசனிடம் கால்ஷீட் பெற்றுத் தரும்படி திருப்பதி பிரதர்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், உத்தமவில்லன் படத்தின் வெளியீட்டின் போது கடன் கொடுத்த அனைவரும் தங்களை மிகவும் நெருக்கடி கொடுத்து வருவதாக திருப்பதி பிரதர்ஸ் சார்பாக அதன் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் குறிப்பிட்டுள்ளார். உத்தம வில்லன் படத்தால் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியதால், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கடன் பிரச்சினையில் சிக்கித் தவித்து வருகிறது என புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நாங்கள் சொன்ன கதையில் நடிக்காமல் உத்தம வில்லன் கதையில் நடித்தார். படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது என்றும், 'த்ரிஷ்யம்' கதையை எடுக்க நாங்கள் விரும்பிய நிலையில், அதனை கமல்ஹாசன் மறுத்துவிட்டார்.

ஆனால் 'த்ரிஷ்யம்' படத்தை வேறு தயாரிப்பு நிறுவனத்துக்கு நடித்துக் கொடுத்தார். உத்தம வில்லன் வெளிநாட்டு உரிமையை கமல்ஹாசன் பெற்றார். தமிழகத்தில் படம் வெளியாவதில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் வெளிநாட்டில் படத்தை கமல் ரிலீஸ் செய்துவிட்டார். இதனால் படம் தமிழில் போதிய வரவேற்பு பெறவில்லை" என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:"என் குரலை தணித்துக் கொள்கிறேன்" - இளையராஜா விவகாரத்தில் பின்வாங்கினாரா வைரமுத்து?

ABOUT THE AUTHOR

...view details