தமிழ்நாடு

tamil nadu

'Thug life' படப்பிடிப்பிற்காக சைபீரியா செல்ல படக்குழு திட்டம்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 3:36 PM IST

Thug life movie update: மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் "தக் லைஃப்" படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ரஷ்யாவில் உள்ள சைபீரியா பகுதியில் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

kamal haasan thug life movie shooting to be held in siberia from february
சைபீரியாவில் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு நடத்த திட்டம்

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் வெளியாகும் போது கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், நாளடைவில் படத்தில் இருக்கும் சிறப்புகள் ரசிகர்களைப் படத்தைக் கொண்டாட வைத்து விடும்.

இவரது இயக்கத்தில், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் பெரும் எதிர்பார்புகளுக்கிடையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. குறிப்பாக, படத்தின் வசனங்கள், இசை, ஒளிப்பதிவு ஆகியவை ரசிகர்கள் படத்தை கொண்டாடும்படிச் செய்தது.

இதனிடையே, இயக்குநர் மணிரத்னம் தனது அடுத்த படத்தை கமல்ஹாசனை வைத்து இயக்க உள்ளதாகத் தகவல் வெளியானது முதல் ரசிகர் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அப்படத்திற்கு, "தக் லைஃப்" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் கமல்ஹாசனின் 234வது படமாக உருவாகி வருகிறது.

கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃப்லிம்ஸ், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறது. மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் "நாயகன்" படத்திற்குப் பிறகு கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணி 37 ஆண்டுகளுக்கு மீண்டும் இணைந்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில், படம் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. அண்மையில் படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதனிடையே, இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்று வந்தது. அதற்காக எண்ணூரில் சுடுகாடு போன்ற செட் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. அதில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்த படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்துள்ளது.

அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக, அடுத்த மாதம் ரஷ்யாவில் உள்ள சைபீரிய நாட்டிற்குச் சென்று படப்பிடிப்பை நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு வாரம் நடைபெறும் இந்த படப்பிடிப்புகளில் கமல் மற்றும் படத்தில் நடிக்கும் சில முக்கிய நடிகர்களும் கலந்து கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் கல்கி ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:எச்.வினோத் - கமல்ஹாசன் இணைப்பில் உருவான படம் கைவிடப்பட்டதா? ராஜ்கமல் பிலிம்ஸ் முக்கிய அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details